நாட்டில் இதுவரை 282,197 PCR பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக COVID – 19 ஒழிப்பு தேசிய படையணி தெரிவித்துள்ளது. நேற்றைய தினத்தில் (27) மாத்திரம் 1,410 PCR பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டன.

இதற்கமைய, இன்று (28) காலை வரை கந்தக்காடு மற்றும் சேனபுர புனர்வாழ்வு நிலையத்தில் அடையாளம் காணப்பட்ட நோயாளர்களின் எண்ணிக்கை 650 ஆக அதிகரித்துள்ளது.

இதனிடையே, கொரோனா பரவல் காரணமாக வௌிநாடுகளில் தங்கியிருந்த இலங்கையர்கள் 88 பேர் இன்று நாடு திரும்பியுள்ளனர்.

நாடு திரும்பிய அனைவரையும் தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, முப்படையினரால் பராமரிக்கப்படும் தனிமைப்படுத்தல் நிலையங்களில், தனிமைப்படுத்தலை நிறைவு செய்த 606 பேர் இன்று வீடு திரும்பியதற்கமைய, இதுவரை 45,636 பேர் தனிமைப்படுத்தலின் பின்னர் வீடு திரும்பியுள்ளனர்.

முப்படையினரால் நிர்வகிக்கப்படும் 77 கண்காணிப்பு நிலையங்களில் 7,484 பேர் தொடர்ந்தும் தனிமைப்படுத்தலில் உள்ளதாக COVID – 19 ஒழிப்பு தேசியப் படையணி தெரிவித்துள்ளது.

இதனிடையே, நேற்று கொரோனா ​நோயாளர்கள் 11 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

சென்னையில் இருந்து வருகை தந்த இந்தியர்கள் 6 பேர் மற்றும் இலங்கையர்கள் இருவர் இங்கிலாந்தில் இருந்து திரும்பிய இருவர் மற்றும் ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து திரும்பிய ஒருவருக்கும் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 3,360 ஆக அதிகரித்துள்ளது.

இவர்களில் 3,208 பேர் குணமடைந்துள்ளதுடன் 139 பேர் தொடர்ந்தும் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.