தெரிவுக்குழு கூட்டத்தின் போது அரசியலமைப்பில் முன்மொழியப்பட்ட 20 ஆவது திருத்தத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய 53 திருத்தங்கள் அடங்கிய ஆவணத்தை சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா இன்று உயர் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார். நாடாளுமன்றத்தை ஒருவருடத்தில் கலைக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், இரண்டரை ஆண்டுகளின் பின்னரே நாடாளுமன்றத்தை கலைக்க முடியும் என திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட திருத்தங்களில் ஜனாதிபதியின் அதிகாரங்கள் மற்றும் செயல்பாடுகளின் கீழ், கோரப்பட்டபடி, இலவச மற்றும் நியாயமான தேர்தல்களுக்கு ஏற்ற சூழலை உருவாக்குவதை உறுதிசெய்ய ஜனாதிபதிக்கு அதிகாரம் உள்ளது என்ற பிரிவும் உங்வாங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அரசியலமைப்பின் 41 ஏ பிரிவின் விதிகளின்படி சட்டமா அதிபர், காவல்துறை மா அதிபர், பாராளுமன்ற பொதுச்செயலாளர், தலைமை நீதிபதி, மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் மற்றும் நீதிபதிகள், நீதித்துறை சேவை ஆணைக்குழுவின் உறுப்பினர்கள், கணக்காய்வாளர் மற்றும் தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் ஆகிய பதவிகளை ஜனாதிபதியால் நியமிக்க வேண்டும் என்றும் திருத்தங்கள் முன்மொழியப்பட்டுள்ளன.