தற்காலிகமாக மூடப்பட்டிருந்த ஓல்கொட் மாவத்தையில் அமைந்துள்ள கொழும்பு பிரதி பொலிஸ்மா அதிபர் அலுவலக கட்டிடத்தில் இயங்கும் பொலிஸ் அனுமதி விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வதற்கான அலுவலகம் நாளை முதல் மீண்டும் திறக்கப்படும் என பொலிஸ் ஊடக பிரிவு அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் பரவல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குறித்த அலுவலகம் தற்காலிகமாக மூடப்பட்டிருந்த நிலையில், விண்ணப்பங்கள் அனைத்தும் இதுவரை ஒன்லைனில் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. இந்நிலையில் பொதுமக்களுக்கு ஏற்படும் சிரமத்தை கருத்தில் கொண்டு, அந்த அலுவலகத்தை மீண்டும் திறக்க முடிவு செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடக பிரிவு அறிக்கையொன்றின் மூலம் அறிவித்துள்ளது.

சுகாதார பிரிவினர் வழங்கியுள்ள முறையான பாதுகாப்பு நடைமுறைகளுக்கு ஏற்ப குறித்த அலுவலகம் பராமரிக்கப்படும் எனவும், விண்ணப்பதாரிகள் தொடர்பிலும் உரிய சுகாதார வழிமுறைகள் பின்பற்றப்படும் எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, விண்ணப்பதாரர் மட்டுமே சுகாதார நடைமுறைகளுக்கு ஏற்ப அலுவலகத்திற்குள் பிரவேசிக்க அனுமதிக்கப்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அலுவலகம் மீண்டும் திறக்கப்பட்டாலும், முடிந்தவரை ஒன்லைனில் விண்ணப்பிக்குமாறு விண்ணப்பதாரர்களை பொலிஸார் கேட்டுள்ளனர்.