ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியுதவியில், இலங்கை மின்சார சபையால் மன்னார் – தலைமன்னார் பிரதான வீதி, நடுக்குடா பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் காற்றாலை மின் உற்பத்தித் திட்ட செயற்பாடுகள் தொடர்பான விடயங்களை ஆராய்வதற்கு, மின்வலு அமைச்சர் டலஸ் அழகபெரும, காற்று, சூரியசக்தி வலு இராஜாங்க அமைச்சர் துமிந்த திஸாநாயக்க தலைமையிலான விசேட குழுவினர், மன்னார் – நடுக்குடா பகுதிக்கு நேற்று மாலை விஜயம் மேற்கொண்டிருந்தனர்.இதன்போது, சுமார் 30 காற்றாலைகளைக் கொண்டு அமைக்கப்பட்ட 103.5 மெகா வோல்ட் மின் உற்பத்தித் திறனைக் கொண்ட மேற்படி திட்டத்தின் செயற்பாடுகள் தொடர்பாக அக்குழு ஆராய்ந்ததுடன், காற்றாலை மின் உற்பத்தி இடம்பெறும் பகுதி, காற்றாலை மின் பிறப்பாக்கியின் செயற்பாடுகள் இடம்பெறும் பகுதிகளுக்கும் நேரடியாக விஜயம் மேற்கொண்டிருந்தனர். இந்தக் குழுவில், இலங்கை மின்சார சபையின் மேலதிக முகாமையாளர், திட்டப் பணிப்பாளர் திட்ட முகாமையாளர், பொறியியளாலர்கள் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.