சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் ஏற்பாட்டில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது. குறித்த போராட்டம் யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்பாக இன்று காலை 11 மணிக்கு இடம்பெற்றுள்ளது. போராட்டத்தில் கலந்து கொண்ட சிறுவர்களும், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களும், இராணுவத்தினராலும் துணை இராணுவக் குழுவினரால் கடத்தப்பட்டும், கைது செய்யப்பட்டும் காணாமலாக்கப்பட்ட உறவுகளுக்கு என்ன நடந்தது என்று கண்ணீருடன் போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர். குறித்த போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் ‘வரவேண்டும் வரவேண்டும் ஐ.நா அமைதிப்படை வரவேண்டும்’, ‘எங்கள் குழந்தைகள் எங்கே இதற்கு பதில் கூற யாரும் இல்லையா’, ‘எங்கே எங்கே எங்கள் அப்பா எங்கே’, ‘எங்கே எங்கள் சிறார்கள் கோத்தா அரசே பதில் சொல்’ போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு குறித்த கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.