புதிய கொரோனா தொற்றாளராக அடையாளம் காணப்பட்ட திவுலப்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த பெண் பணிபுரிந்த ஆடைத்தொழிற்சாலையில், 400 பேர் வரை சேவையாற்றுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்த தொழிற்சாலை, மினுவாங்கொட- யக்காதுவ பிரதேசத்தில் உள்ள முன்னணி ஆடைத்தொழிற்சாலை என்றும் தெரிவிக்கப்படுகின்றது. மேலும் கொரோனா தொற்றாளராக உறுதிப்படுத்தப்பட்டுள்ள பெண்ணுடன் ஒன்றாக பயணித்த, 40 பேர், சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். இதேவேளை பெண்ணின் கணவர், அவரின் பிள்ளைகள் நால்வர் மற்றும் பெண்ணின் தந்தை ஆகியோர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன், இவரது ஒரு குழந்தை மூச்சு விடுவதில் சிரமத்தை எதிர்நோக்கியுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அத்துடன் இவர் பணிபுரிந்த ஆடைத்தொழிற்சாலை தற்போது சீல் வைத்து மூடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை கம்பஹா மாவட்டத்திலுள்ள சகல பாடசாலைகளும் ஒருவாரம் விடுமுறை வழங்கப்படவுள்ளதென, கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் அறிவித்துள்ளார். இதற்கமைய, நாளை தொடக்கம் எதிர்வரும் 9ஆம் திகதி வரை இந்தப் பிரதேச பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன், இந்த மாவட்டத்திலுள்ள சகல பிரத்தியேக கல்வி நிலையங்களுக்கும் இந்த விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. திவுலப்பிட்டிய பிரதேசத்தில் பெண்ணொருவர் கொரோனா தொற்றாளராக அடையாளம் காணப்பட்டதையடுத்தே, கல்வி அமைச்சு இத்தீர்மானத்தை எடுத்துள்ளது.