திவுலபிட்டிய பகுதியில் கொரோனா தொற்றுக்குள்ளான நபருடன் தொடர்பில் இருந்த மேலும் 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கொரோனா தொற்றுக்குள்ளான பெண்ணுடன் மினுவங்கொட தொழிற்சாலையில் கடமையாற்றி வந்த 10 பேரே இவ்வாறு கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளனர். அதனடிப்படையில் இதுவரையில் கொரோனா தொற்றுக்குள்ளான பெண்ணுடன் மொத்தமாக 90 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. திவுலுபிட்டிய பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் மற்றும் அவருடைய மகள் கொரோனா தொற்றுக்கு உள்ளாதை அடுத்து திவுலுபிட்டிய, மினுவங்கொட மற்றும் வெயங்கொட பொலிஸ் பிரிவுகளில் பிறப்பிக்கப்பட்ட பொலிஸ் ஊரடங்கு சட்டம் தொடர்ந்தும் அமுலில் உள்ளது. இதேவேளை கொரோனா தொற்றுக்குள்ளான பெண்ணின் தொழிற்சாலை ஊழியர்களுக்கு பிசிஆர் பரிசோதனைகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. இவ்வாறு கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களுடன் தொடர்புடையவர்களை இனங்காணும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை யாழ்ப்பாணத்தில் இன்று மேற்கொள்ளப்பட்ட 115 பீ.சீ.ஆர் பரிசோதனைகளில் ஒருவருக்கு கொவிட் 19 தொற்றுறுதியாகியுள்ளது. மினுவாங்கொடை ஆடை தொழிற்சாலையில் பணிபுரிந்த இரண்டு பெண்களின் ஒருவருக்கே கொவிட் 19 தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளதாக யாழ் போதான வைத்தியசாலையின் பணிப்பாளர் தா. சத்தியமூர்த்தி குறிப்பிட்டுள்ளார். அதேநேரம், முழங்காவில் தனிமைப்படுத்தல் முகாமில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தவர்களில் வெளிநாட்டில் இருந்து நாடு திரும்பிய ஒருவருக்கும் கொவிட் 19 தொற்றுறுதியாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அதேநேரம் மினுவாங்கொடையில் தொற்றுறுதியான பெண் ஒருவருடன் தொடர்பில் இருந்த மொனராகலையைச் சேர்ந்த ஒருவருக்கும் கொவிட் தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர்களை தற்போது தேசிய தொற்று நோயியல் நிறுவகத்திற்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்கீழ் நாட்டில் கொவிட்-19 தொற்றுறதியானவர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 506 ஆக உயர்வடைந்துள்ளது.

இதேவேளை திவுலபிடிய பகுதியில் 2 ஆயிரம் பேருக்கு பீ.ஆர்.சி பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அடையாளம் காணப்பட்டுள்ள கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்பை பேணியவர்களுக்கே இப்பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதில், நேற்று கொரோனா தொற்றுறுதியானவர்கள் பணிபுரிந்த ஆடைத் தொழிற்சாலையின் ஏனைய ஊழியர்கள், அவர்களின் குடும்பங்கள் மற்றும் பாடசாலை மாணவர்களும் உள்ளடங்குவதாக கூறப்படுகிறது.