கொழும்பு பொரளை காசல் மகப்பேற்று வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த கர்ப்பிணி பெண் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.குறித்த பெண் முல்லேரியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொரளை காசல் மகப்பேற்று வைத்தியசாலையின் பணிப்பாளர் டொக்டர் பிரதீப் விஜேசிங்க தெரிவித்தார்.

இந்த நிலையில், இந்த பெண் பிரென்டிக்ஸ் நிறுவனத்துடன் தொடர்புடைய மற்றுமொரு நிறுவனத்தில் பணிபுரிந்தவர் என தொற்று நோய் பிரிவின் விசேட வைத்திய நிபுணர் சுதத் சமரவீர தெரிவித்தார்.

இதனையடுத்து, அவர் பணியாற்றும் நிறுவனத்தின் அனைத்து ஊழியர்களுக்குமான PCR பரிசோதனை இன்று மாலைக்குள் முன்னெடுக்கப்படுமென அவர் குறிப்பிட்டார்.

இதனிடையே, மினுவாங்கொடை பிரென்டிக்ஸ் தொழிற்சாலையின் அனைத்து ஊழியர்களுக்கும் நேற்றைய தினம் PCR பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டதாக தொற்றுநோய் பிரிவின் விசேட வைத்திய நிபுணர் சுதத் சமரவீர தெரிவித்தார்.

தற்போது அவர்களுடன் பழகியவர்கள், அவர்கள் வாழும் பிரதேசங்களில் உள்ளவர்களுக்கான PCR பரிசோதனைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இதனிடையே, மினுவாங்கொடை தொழிற்சாலையின் ஊழியருக்கோ அல்லது அவர்களின் நெருங்கிய உறவினர்களுக்கோ ஏதேனும் தகவல் அறிந்துகொள்ளும் தேவையிருந்தால் 011 345 65 48 எனும் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொள்ளுமாறு இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா அறிவித்துள்ளார்