கட்டுநாயக்க முதலீட்டு ஊக்குவிப்பு வலயத்தின் மூன்று தொழிற்சாலைகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.குறித்த தொழிற்சாலைகளில் பணிபுரியும் மூவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இதனால், கட்டுநாயக்க முதலீட்டு ஊக்குவிப்பு வலயத்தின் 3 தொழிற்சாலைகளின் பணியாளர்களையும் PCR பரிசோதனைக்கு உட்படுத்தியுள்ளதாக விமான சேவைகள் ஏற்றுமதி வலய அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் D.V. சானக்க தெரிவித்தார்.

PCR பரிசோதனைகளின் முடிவுகள் கிடைக்கப்பெறும் வரை தொழிற்சாலைகள் மூடப்பட்டிருக்குமெனவும் அவர் கூறினார்.

அதேபோன்று, கட்டுநாயக்க முதலீட்டு ஊக்குவிப்பு வலயத்தில் அவதானமிக்க வலயங்களில் அதிகளவான பணியாளர்கள் கடமைகளில் ஈடுபடவில்லை எனவும் D.V. சானக்க தெரிவித்தார்.

கட்டுநாயக்க முதலீட்டு ஊக்குவிப்பு வலயத்தில் சுமார் 36,000 பேர் பணியாற்றுவதுடன், இந்நாட்களில் 6000 பேர் மாத்திரமே கடமைகளில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

இதனிடையே, கட்டுநாயக்க முதலீட்டு ஊக்குவிப்பு வலயத்தில் சுமார் 800 பேருக்கு PCR பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் D.V. சானக்க தெரிவித்தார்.

இந்த நிலையில், நேற்று முன்தினம் 400 பேருக்கு PCR பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டிருந்ததாகவும் அவர்களில் எவருக்கும் கொரோனா தொற்று ஏற்படவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.