ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக மாணவி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.முகாமைத்துவ பீடத்தில் மூன்றாம் ஆண்டில் கல்வி கற்கும் மாணவி ஒருவருக்கே கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பல்கலைக்கழகத்தின் உபவேந்தர், சிரேஷ்ட பேராசிரியர் சுதந்த லியனகே தெரிவித்தார்.

பாணந்துறை பகுதியை சேர்ந்த குறித்த மாணவி சிகிச்சைகளுக்காக IDH வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

குறித்த மாணவி ஒன்லைன் முறைமையினூடாக தமது பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகளை முன்னெடுத்து வந்தமையினால் அவரது வீட்டிலிருந்தே கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதாக சிரேஷ்ட பேராசிரியர் சுதந்த லியனகே கூறினார்.

மேலும், கொரோனா தொற்றுக்குள்ளான மாணவி பல்கலைக்கழக விடுதியில் தங்கவில்லை எனவும் அவர் வாடகை அறையொன்றில் தங்கியிருந்ததாகவும் சிரேஷ்ட பேராசிரியர் தெரிவித்தார்.

இதனடிப்படையில், மாணவியுடன் நெருங்கிப் பழகிய ஏனைய மாணவிகள் உள்ளிட்ட சிலருக்கான PCR பரி​சோதனைகளை முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ளதாக ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் சிரேஷ்ட பேராசிரியர் சுதந்த லியனகே கூறினார்.

மேலும், அவருக்கு எவ்வாறு கொரோனா தொற்று ஏற்பட்டது என்பது தொடர்பில் அதிகக் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக சிரேஷ்ட பேராசிரியர் சுட்டிக்காட்டினார்.

தற்போது பல்கலைக்கழக விடுதிகளில் 200-க்கும் குறைவான மாணவர்களே தங்கியுள்ளதாகவும் முகாமைத்துவ பீடத்தின் அனைத்து மாணவர்களையும் விடுதிகளிலேயே தனிமைப்படுத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை, கொரோனா தொற்றுடன் அடையாளங்காணப்பட்ட மாணவியின் தாய், பாணந்துறை பொது வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் தாதியாக சேவையாற்றுகின்றமை தெரியவந்துள்ளது.

இதனால், வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் கடமையாற்றும் சுமார் 20 ஊழியர்கள், PCR பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக பாணந்துறை பொது வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.