அரச வைத்தியசாலைகளில் கிளினிக் சிகிச்சை பெறும் நோயாளர்களின் மருந்துகளை அவர்களின் வீடுகளுக்கு பெற்றுக் கொடுக்கும் நிகழ்ச்சித் திட்டம் ஒன்றை செயற்படுத்த சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.
பதில் சுகாதார பணிப்பாளர் நாயகம் வைத்தியர் எஸ்.ஶ்ரீதரன் இதனை தெரிவித்துள்ளார்.

தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாள்பட்ட நோய்களுடன் கூடிய முதியவர்கள் வைத்தியசாலைக்கு வருவதை கட்டுப்படுத்துவதை நோக்காக கொண்டு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

வைத்தியசாலைகளில் கிளினிக் சிகிச்சையின் போது காணப்படும் அதிக சன நெரிசல் காரணமாக இந்த நோய் இலகுவில் பரவக்கூடும் என சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார்.

அதன்படி, எதிர்வரும் செவ்வாய்க்கிழமையில் இருந்து குறித்த மருந்துகளை வீடுகளுக்கு விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள நிலையில் கம்பஹா மற்றும் கொழும்பு மாவட்டங்களினுள் முதலில் இந்த நிகழ்ச்சித் திட்டத்தை ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக பதில் சுகாதார பணிப்பாளர் நாயகம் வைத்தியர் எஸ்.ஶ்ரீதரன் மேலும் தெரிவித்தார்.