சுகாதார ஒழுங்கு விதிகள் அடங்கிய சட்டத்தை வர்த்தமானியில் அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாரச்சி தெரிவித்துள்ளார்.சட்டமூலத்தை தயார் செய்வதற்கான ஒழுங்கு விதிகள் சட்டவரைபு திணைக்களத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

நாட்டில் பாரியளவில் கொரோனா தொற்றாளர்கள் பதிவாகாதிருப்பதற்கு பொது மக்களின் ஒத்துழைப்பு சிறப்பாக காணப்படுவதாகவும் சுகாதார அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும், அரசாங்கத்தால் விதிக்கப்பட்டுள்ள சுகாதார ஒழுங்கு விதிகளை சட்டமாக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

சட்டவரைபு திணைக்களத்திலிருந்து சட்டமூலம் கிடைத்தவுடன் இரு நாட்களுக்குள் அதனை வர்த்தமானியில் வௌியிட தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் கூறியுள்ளார்.

வர்த்தமானியில் வௌியிடப்படும் ஒழுங்கு விதிகளை பின்பற்றாதவர்கள் பிடியாணை இன்றி கைது செய்யப்படுவார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கைது செய்யப்படுவோருக்கு 06 மாதங்கள் சிறைத்தண்டனையை பெற்றுக் கொடுப்பதற்கான சட்ட திருத்தங்களும் குறித்த வர்த்தமானியில் உள்ளடக்கப்படும் என சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

முகக்கவசம் அணிதல், சமூக இடைவௌியை பேணுதல் உள்ளிட்ட விடயங்களை குறித்த வர்த்தமானியூடாக சட்டமாக்கவுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, மினுவாங்கொடை கொரோனா கொத்தணியில் தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 1,186 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா தொற்றுக்குள்ளான 103 பேர் நேற்று அடையாளம் காணப்பட்டனர்.

இவ்வாறு அடையாளம் காணப்பட்டவர்களில் மினுவாங்கொடை பிரென்டிக்ஸ் நிறுவன ஊழியர்கள் இருவரும் தொற்றுக்குள்ளானோருடன் பழகியவர்களில் 101 பேரும் அடங்குகின்றனர்.

கட்டுநாயக்க முதலீட்டு ஊக்குவிப்பு வலயத்தில் மேலும் 14 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

தொற்று நிலைமை தொடர்பில் முதலீட்டு ஊக்குவிப்பு வலயத்தின் முகாமையாளர் மற்றும் சுகாதார அதிகாரிகளினால் ஆராயப்படுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கு முன்னர், கட்டுநாயக்க முதலீட்டு ஊக்குவிப்பு வலயத்தின் 03 தொழிற்சாலைகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.

குறித்த தொழிற்சாலைகளில் பணிபுரியும் மூவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டது.

இதனிடையே, கொழும்பு தேசிய வைத்தியசாலையின் 3 சிற்றூழியர்களுக்கு நேற்று மாலை COVID – 19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மினுவாங்கொடை கொரோனா கொத்தணியில் தொற்றுக்குள்ளானோரை கண்டறிவதற்காக, இதுவரை 26,000 PCR பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இந்தநிலையில், மினுவாங்கொடை பிரென்டிக்ஸ் தொழிற்சாலையில் அனைத்து ஊழியர்களுக்குமான PCR பரிசோதனைகள் நிறைவடைந்துள்ளதாக தொற்றுநோய் தடுப்பு பிரிவின் தலைமை அதிகாரி விசேட வைத்திய நிபுணர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், PCR பரிசோதனைகள் முன்னெடுக்கப்படாமை குறித்து, மினுவாங்கொடை கொரோனா நோயாளர்களுடன் பழகியோருக்கு அச்சம் காணப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

இந்தநிலையில், எவரேனும் ஒருவர் செப்டெம்பர் 23 ஆம் திகதியின் பின்னர் மினுவாங்கொடை பிரென்டிக்ஸ் தொழிற்சாலையின் ஊழியர் எவரையாவது சந்தித்திருந்தால் PCR பரிசோதனையை மேற்கொள்ளுமாறு தொற்றுநோய் தடுப்பு பிரிவின் தலைமை அதிகாரி கோரிக்கை விடுத்துள்ளார்.

குறித்த ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரியாத பலருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் இந்த வேண்டுகோளை விடுப்பதாக அவர் கூறியுள்ளார்.

நேரடியாக தொடர்புபடாத போதிலும், ஆடைத் தொழிற்சாலையின் பணியாளர்களை ஏதேனும் ஒருவகையில் சந்தித்தவர்களாக இருப்பின், PCR சோதனையை மேற்கொள்வது சிறந்தது எனவும் விசேட வைத்திய நிபுணர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.

இதேவேளை, வைத்தியசாலைகளில் நோயாளிகளை பார்வையிட செல்வோர், தமது உடல்நிலை ஆரோக்கியமாக உள்ளதா என்பது தொடர்பில் உறுதிப்படுத்திக் கொள்ளுமாறு சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

கம்பஹா மாவட்டத்தில் இதுவரை 5,357 பேருக்கு PCR பதரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளது.

இதனிடையே நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 4,628 ஆக அதிகரித்துள்ளது.

இதுவரை 3,306 பேர் குணமடைந்துள்ளதுடன் ஆயிரத்து 309 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

இதேவேளை, கத்தாரிலிருந்து 44 பேர் இன்று (11) காலை நாடு திரும்பியுள்ளனர்.

அவர்களை தனிமைப்படுத்தி கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தனிமைப்படுத்தி கண்காணிக்கப்பட்ட 90 பேர் இன்று வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளனர்.

இதுவரையில் 50,726 பேர் தனிமைப்படுத்தி கண்காணிக்கப்பட்டதன் பின்னர் வீடு திரும்பியுள்ளதாக COVID – 19 தொற்று ஒழிப்பு தொடர்பான தேசிய செயலணி குறிப்பிட்டுள்ளது.

முப்படையினரால் பராமரிக்கப்படும் 92 தனிமைப்படுத்தல் நிலையங்களில் 10,224 பேர் தற்போது கண்காணிக்கப்படுகின்றனர்

நேற்று 4,754 பேருக்கு PCR பரிசோதனை முன்னெடுக்கப்பட்டதுடன், இதுவரை நாட்டில் மூன்று இலட்சத்து 763 PCR பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.