திரு. எஸ். சுப்ரமணிய சுவாமி
கௌரவ இராஜ்ய சபா உறுப்பினர்
புதுடெல்லி.

அன்புடையீர்,

அண்மையில் ‘நியூஸ் எக்ஸ்’ தொலைக்காட்சிச் சேவைக்கு நீங்கள் வழங்கிய செவ்வியில் தெரிவிக்கப்பட்ட கருத்துகள் குறித்த எமது கவலையையும் மறுப்பையும் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறோம்.இலங்கைத்தீவின் பூர்வீகக் குடிகளான தமிழர்களின் வரலாறு பற்றிய சர்ச்சைகளும், அநாவசியமான விவாதங்களும் பௌத்த பேரினவாதத்தின் செயற்பாட்டாளர்களால் திட்டமிடப்பட்ட வகையில் தூண்டிவிடப்பட்டுக் கொண்டிருக்கும் ஒரு தருணத்தில், தமிழர்களின் தேசிய இனப் பிரச்சினை சம்பந்தமாக நீங்கள் கொண்டிருக்கின்ற நிலைப்பாடு என நாம் நம்பியிருந்த விடயங்களுக்கு முற்றிலும் முரணாணவையாகவே தங்கள் கருத்துகள் அமைந்துள்ளன.

தற்போது நீங்கள் அங்கம் வகிக்கும் ஆளும் பாரதீய ஜனதாக் கட்சியின் இராஜ்ய சபா உறுப்பினர் என்ற வகையிலும், தற்போது இலங்கையை ஆளுகின்ற இராஜபக்ச குடும்பத்தினருடன் மிகவும் நெருக்கமான நட்பினைக் கொண்டிருப்பவர் எனும் வகையிலும் தங்கள் கருத்துகள் வெளிப்படுத்தப்பட்டிருந்தாலும்கூட, பௌத்த, இந்து மதங்களுக்கிடையேயான தொடர்பு மற்றும் மலையகத் தமிழர் பற்றிய கருத்துகளை தவிர்த்து இலங்கைத் தமிழர்களின் வரலாற்றையும் இருப்பையும் கேள்விக்குட்படுத்துகின்ற தங்கள் கருத்துகள் எவராலும் ஏற்றுக்கொள்ளப்பட முடியாதவை.

இலங்கைத்தீவில் தமிழர்களின் மிக நீண்ட கால இருப்பானது உள்ளூர், மற்றும் சர்வதேச வரலாற்று ஆசிரியர்களினாலும், தொல்லியல் ஆய்வாளர்களினாலும் வெவ்வேறு காலகட்டங்களில் பல தடவைகள் அழுத்தம் திருத்தமாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்தியாவில் இருந்த ஈழ ஆதரவாளர்கள் பலரும், போராட்டத்தின் பெயரால் இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் நடாத்தப்பட்ட மிலேச்சத்தனமான சம்பவங்களால் தமது நிலைப்பாடுகளை மாற்றிக்கொண்டதை நாம் கண்டிருந்தோம். அதற்கான காரணங்களையும் எம்மால் புரிந்து கொள்ள முடிகிறது.

ஆனாலும், ஒட்டுமொத்தமான ஈழத் தமிழர் சமூகத்தின் அடிப்படையான அரசியல், சமூக, பண்பாட்டு பிரச்சினைகளில், நம்பிக்கை தரக்கூடிய யதார்த்தமான ஓர் நிலைப்பாட்டினையே நீங்கள் கொண்டிருக்கிறீர்கள் என்று நாம் கருதியிருந்தோம்.

இலங்கையின் புதிய அரசுடனான இந்திய மத்திய அரசின் அணுகுமுறைகளில் தங்களின் பங்கு அதிகமாக இருக்கும் என்றும் இலங்கை அரசியலமைப்பின் பதின்மூன்றாவது திருத்தத்தை வலுப்படுத்தும், முழுமையாக நடைமுறைப்படுத்தும் விடயத்தில் தங்கள் ஈடுபாடும், ஒத்துழைப்பும் நியாயமான அளவில் கிடைக்கும் என்றும் எதிர்பார்த்த வேளையில் அவை அனைத்தையும் நிராகரிக்கும் வகையிலேயே தங்கள் செவ்வி அமைந்திருந்தது என்பதை தங்களுக்கு சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

இலங்கைத் தமிழர்கள் சம்பந்தமாக 1980 களில் தாங்கள் கொண்டிருந்த நிலைப்பாட்டிற்கு காரணமான அரசியல், சமூக, பொருளாதார நெருக்கடிகளும் இலங்கைத்தீவில் தமிழ்ச் சமூகம் இரண்டாம்தர குடிமக்களாக நடாத்தப்படும் போக்குகளும் இன்றைய அளவில் மிகவும் மோசமான நிலையை எட்டியுள்ள நிலைமையில், எதிர்காலத்தில் இலங்கைத் தீவில் தமிழ் மக்களுக்கு கிடைக்க வேண்டிய சமத்துவமான உரிமைகளை பெற்றுக் கொள்வதற்கான செயற்பாடுகளில் தங்களின் காத்திரமான பங்கினையும் எதிர்பார்த்துள்ளோம்.

வாய்ப்புகள் கிடைக்குமாயின் மேற்குறிப்பிட்ட விடயங்கள் சம்பந்தமாக மிக ஆழமானதும் பரந்த அளவிலானதுமான கலந்துரையாடல்கள் தங்களுடன் மேற்கொள்ள, இலங்கைத் தீவில் தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகளுக்காக மறைந்த தலைவர் அமரர் க. உமாமகேஸ்வரன், தற்போதைய தலைவர் திரு. த. சித்தார்த்தன் ஆகியோரின் தொடர்ச்சியான தலைமைகளின் கீழ் சாத்தியமான அனைத்து வழிகளிலும் தொடர்ந்தும் போராடி வரும் அமைப்பினர் என்ற வகையில் காத்திருக்கின்றோம்.

செ. ஜெகநாதன்
இணைப்பாளர் (சர்வதேச விவகாரங்கள்)
ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி ( புளொட்)
11.10.2020.

Mr. S. Jagannathan. Political Analyst. International Media Spokesperson, PLOTE

Jeganathan@web.de.

+49 176 43681034.