உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் பயன்படுத்தியதும், நுவரெலியா பயிற்சி முகாமுக்கு நபர்களை அழைத்துச் செல்ல பயன்பட்டதுமான டொல்பின் ரக வாகனத்தை பொலிஸார் நேற்று (22) கைப்பற்றியுள்ளனர்.உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள மொஹமட் ஹனிபா மொஹமட் அக்ரமினால் நுவரெலியாவில் உள்ள பயிற்சி முகாமுக்கு நபர்களை அழைத்து சென்ற வாகனம் இதுவென கண்டறியப்பட்டுள்ளது.

அட்டாளைச்சேனை பிரதேசத்தில் உள்ள ஒருவருக்கு குறித்;த வேன் விற்கப்பட்ட நிலையில் மட்டக்களப்பு மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவினர் அந்த வேனை கைப்பற்றி அதனை காத்தான்குடி பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

இந்த வாகனம் கண்டி பகுதியில் உள்ள ஒரு வாகன விற்பனை நிலையத்தில் இருந்தும் அது விற்பனையாகாததால் கடந்த மாதம் அந்த வாகனத்தை சாய்ந்தமருது பகுதியில் உள்ள வாகன விற்பனை நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

அங்கு வைத்து கடந்த செப்டேம்பர் மாதம் 4 ஆம் திகதி தற்போதைய உரியாளர் கொள்வனவு செய்துள்ளார்.

இதேவேளை, உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் கடந்த ஏப்ரல் 25 ஆம் திகதி காத்தான்குடியில் வைத்து கைது செய்யப்பட்டு தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள மொஹமட் ஹனிபா மொஹமட் அக்ரம் கொள்வனவு செய்து பயன்படுத்திய மற்றுமொரு சிறிய ரக வாகனம் ரிஸ்வி நகரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது.

கடந்த 16 ஆம் திகதி கிடைக்கப் பெற்ற தகவலின் அடிப்படையிலேயே மட்டக்களப்பு மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவினரால் இந்த வாகனம் கைப்பற்றப்பட்டுள்ளது.