சவுதி அரேபியாவில் பாதுகாப்பு இல்லங்களில் தங்கியுள்ள இலங்கையர்களை 48 மணித்தியாலங்களுக்குள் அழைத்து வர ஜனாதிபதி உத்தரவின் பேரில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவின் பணிப்புரைக்கு அமைய நடைபெற்ற சிறப்பு பணிக்குழுவின் கூட்டத்தில் இதுதொடர்பான தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக கொவிட் 19 வைரசை கட்டுப்படுத்தும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையத்தின் தலைவரும் இராணு தளபதியுமான லெப்டினென் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்

கொவிட் வைரஸ் பரவல் காரணமாக சவுதி அரேபியாவில் உள்ள இலங்கையர்களின் வதிவிட மற்றும் தொழில் வாய்ப்புக்களுக்கு கடும் பாதிப்புக் காணப்படுவதாக தெரியவந்துள்ளது.

அந்நாட்டின் 150 பாதுகாப்பு இல்லங்களில் இவர்கள் தங்கியுள்ளனர். இவர்களை 48 மணித்தியாலங்களுக்குள் நாட்டிற்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பணிப்புரை வழங்கியுள்ளார். இதற்காக ஒருநாளைக்கு இரண்டு விமான சேவைகளையேனும் நடைமுறைப்படுத்த வேண்டும். ஜனாதிபதியின் பணிப்புரைக்கு அமைய வைரஸினால் பாதிக்கப்படக்கூடிய குழுக்கள் குறித்து கூடுதல் கவனம் செலுத்த தீர்மானிக்கப்பட்டிருப்பதாக கொவிட்-19 பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

இவர்களை ஒருநாளைக்குள் பிசிஆர் பரிசோனைக்காக அனுப்பும் செயற்பாடு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.

5 ஆயிரம் ரூபா கொடுப்பனவை வழங்குதல், நோயாளிகளுக்குத் தேவையான மருந்துகளை வீடுகளுக்குச் சென்று வழங்குதல், தனிமைப்படுத்தப்பட்டுள்ள குடும்பங்களுக்கு பத்தாயிரம் ரூபா பெறுமதியான அத்தியாவசிய உணவுப் பொதியை வழங்குதல், ஹோட்டல் தொற்றொதுக்கல் செயற்பாட்டை விரைவில் நிறைவு செய்தல் மதலான விடயங்கள் குறித்தும் விரிவாக கலந்துரையாடப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.