மாந்தை மேற்கு பிரதேசச் செயலகத்தின் கிராம அலுவலகர்களுக்கான பதில் நிர்வாக உத்தியோகத்தராக கடமையாற்றும் இலுப்பை கடவை கிராம அலுவலரான விஜி என அழைக்கப்படும்
எஸ்.விஜியேந்திரன் (வயது-55) என்பவர் நேற்று (3) இரவு மர்மமான முறையில் உயிரிழந்துள்ளதாக இலுப்பைக்கடவை பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த நிலையில் சம்பவம் இடம் பெற்ற பகுதிக்கு மன்னார் மாவட்ட பதில் நீதவான் இ. கயஸ் பல்டானோ இன்றைய தினம் (4) மதியம் சென்று பார்வையிட்டதோடு,விசாரனைகளையும் முன்னெடுத்தார்.

இதன் போது சட்ட வைத்திய அதிகாரி வைத்தியர் எஸ்.பிரனவன், திடீர் மரண விசாரனை அதிகாரி றொஜன் ஸ்ரலின் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்றனர்.

இதன் போது உயிரிழந்த கிராம அலுவலகர் செலுத்தி வந்த மோட்டார் சைக்கிள் மற்றும் தலைக்கவசம் ஆகியவை இரத்தத்துடன் காணப்பட்ட நிலையில் அதனை பார்வையிட்டதோடு, உரிய விசாரனைகளை மேற்கொள்ளுமாறு இலுப்பைக்கடவை பொலிஸாருக்கு பதில் நீதவான் உத்தரவிட்டார்.

அதனைத் தொடர்ந்து மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு வருகை தந்த பதில் நீதவான் சடலத்தை பார்வையிட்டதோடு, சடலப் பரிசோதனையின் பின் உறவினர்களிடம் சடலத்தை கையளிக்குமாறு உத்தரவிட்டார்.

மாந்தை மேற்கு பிரதேசச் செயலகத்தின் கிராம அலுவலகர்களுக்கான பதில் நிர்வாக உத்தியோகத்தராக கடமையாற்றும் இலுப்பை கடவை கிராம அலுவலரான எஸ்.விஜியேந்திரன் (வயது-55) என்பவர் நேற்று மாலை 8 மணியளவில் கடமை முடிந்து தனது வீடு நோக்கி சென்று கொண்டிருந்த போது கள்ளியடி ஆத்திமோட்டை பகுதியில் வைத்து மர்மமான முறையில் தாக்கப்பட்டுள்ளார்.

இவரது தலை மற்றும் உடல் பாகங்களில் பாரிய காயம் காணப்பட்டுள்ளதோடு அவர் இனம் தெரியாத நபர்களினால் கூரிய ஆயுதத்தினால் தாக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது.

குறித்த கிராம அலுவலகர் பள்ளமடு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு பின்னர் மன்னார் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போது உயிரிழந்துள்ளதாக இலுப்பைக்கடவை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த நபரின் மரணம் தொடர்பாக இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை எனவம் தீவிர விசாரனைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவில் இடம் பெற்று வரும் சட்ட விரோத மண் அகழ்வு உள்ளிட்ட சட்ட விரோத செயற்பாடுகளுக்கு எதிராக குரல் கொடுத்து வந்துள்ளமையும் தெரிய வருகின்றது.