நெடுந்தீவை பிறப்பிடமாகவும், பிரித்தானியாவை வாழ்விடமாகவும் கொண்ட திரு. சுரேஸ் செல்வரட்ணம் அவர்கள் நேற்று (03.11.2020) செவ்வாய்க்கிழமை காலமானார் என்பதை தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தினராகிய (புளொட்) நாம் மிகுந்த துயருடன் அனைவருக்கும் அறியத்தருகின்றோம்.அவர் 84களில் தனது பள்ளிக் காலத்திலேயே கழகத்தின் தமிழீழ மாணவர் பேரவையில் தன்னை இணைத்துக் கொண்டு மிக தீவிர செயற்பாட்டாளராக தனது சமூகப் பணியை ஆரம்பித்தார்.

பின்னர், நாட்டில் ஏற்பட்ட அரசியல் சூழ்நிலைகளால் பிரித்தானியா சென்று அங்கு வர்த்தக நடவடிக்கையில் தன்னை ஈடுபடுத்தி தன்னை ஒரு முன்னணி வர்த்தகராக வளர்த்துக் கொண்டார்.

அவர் பிரித்தானியாவில் இருந்துகொண்டும் கழகத்தின் நலன்களில் மிகுந்த அக்கறைகாட்டி வந்தார்.

2009ற்கு பிற்பட்ட காலப் பகுதியில் யுத்தத்தால் பாதிப்புற்ற எல்லைக் கிராமங்களில் வாழும் வறிய சிறார்களின் கல்வி மேம்பாட்டில் மிகுந்த சிரத்தை கொண்டிருந்தார்.

எமது அடுத்த சந்ததியின் அறிவு வளர்ச்சியே எம்மை இம்மண்ணில் தொடர்ந்து தக்கவைக்குமென உறுதியாக நம்பினார். அதன் விளைவாக, 2015இன் பிற்பகுதியில் ஆரம்பிக்கப்பட்ட கல்விப் பொருளாதார அபிவிருத்தி அமைப்பு ( FEED) இனுடைய ஆரம்பகர்த்தாக்களில் ஒருவராகவும், அதன் தீவிர செயற்பாட்டாளராகவும், பிரதான பங்களிப்பாளராகவும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்.

தனது உடல் நலம் பாதிப்படைந்த போதிலும் அதனை கிஞ்சித்தும் பொருட்படுத்தாது, ஒவ்வொரு வருடமும் தாயகத்துக்கு விஜயம் செய்து, எல்லைக் கிராமங்களுக்கு நேரடியாகவே சென்று அப்பகுதி சிறார்களின் கல்வி, சத்துணவு, நலநோம்புதலில் மிகுந்த அக்கறை செலுத்தினார். பல முன்பள்ளிகள் உருவாகுவதற்கு காரணகர்த்தாவாக இருந்தார். புகழ் விரும்பாது மிகவும் எளிமையாக
ஒரு தனி மனிதனாகவும், அமைப்புரீதியாகவும் சமூகத்திற்கு அவர் ஆற்றிய சேவைகள் மகத்தானவை.

நட்புக்கும் தோழமைக்கும் அவர் கொடுத்திருந்த மதிப்பு மிகவும் கனதியானது. அவரது திடீர் இழப்பானது எம் அனைவரையும் ஆற்ற வொண்ணாத் துயரில் ஆழ்த்தியுள்ளது.

அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினர், உற்றார், உறவினர் நண்பர்களுடன் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தினராகிய நாமும் இப்பெருந் துயரினைப் பகிர்ந்து கொள்கிறோம்.

அவரது சமூகம் தொடர்பான கனவுகளை நனவாக்க தொடர்ந்து உழைப்பதே நாம் அவருக்கு செலுத்தும் உண்மையான அஞ்சலியாக இருக்கும்.
“அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம்”

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (PLOTE)
ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (DPLF)