குடும்பங்களுக்கு இடையிலான முரண்பாடு கைலப்பாக உருவெடுத்ததில் இருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.சுழிபுரம் மத்தி, குடாக்கனை பகுதியில் நேற்றிரவு இந்தச் சம்பவம் இடம்பெற்றது என்று வட்டுக்கோட்டை பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவ இடத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் மற்றைய ஒருவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்படும் போது உயிரிழந்துள்ளார்.

சம்பவ இடத்தில் வட்டுக்கோட்டை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

சம்பவத்தையடுத்து அந்தப் பகுதியில் உறவினர்களுக்கு இடையே மோதல் உருவாகும் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.

அதே இடத்தைச் சேர்ந்த சின்னவன் செல்வம் (வயது-56) மற்றும் இராசன் தேவராசா (வயது-31) என்ற இருவருமே உயிரிழந்துள்ளனர்.

நேற்று மாலையிலிருந்து முறுகல் நிலை காணப்பட்டுள்ளது. அதுதொடர்பில் வட்டுக்கோட்டை பொலிஸாருக்கும் அறிவிக்கப்பட்டது. எனினும் பொலிஸார் சம்பவ இடத்துக்கு வரவில்லை என்று அந்தப் பகுதியைச் சேர்ந்தோர் தெரிவித்தனர்.

அதனால் ஒரு பகுதியினர் வாள்களுடன் மற்றைய பகுதியினரின் வீட்டுக்குள் பின்னிரவில் புகுந்து சரமாரியாக தாக்குதல் நடத்தியுள்ளனர். அதனால் இருவர் உயிரிழந்துள்ளனர்.

இதேவேளை சுழிபுரம் இரட்டைக் கொலை தொடர்பில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் கைது செய்யப்பட்டு பொலிஸ் காவலிலுள்ளனர். எனினும் பிரதான சந்தேக நபர் உள்ளிட்ட இருவர் தலைமறைவாகியுள்ளனர் என்று வட்டுக்கோட்டை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.