கொழும்பு மாவட்டத்தின் மருதானை, கோட்டை, புறக்கோட்டை, கொம்பனித்தெரு, டேம் வீதி ஆகிய பொலிஸ் பிரிவுகள் இன்று அதிகாலை 5 மணி முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.கொழும்பு மாவட்டத்தில் ஏற்கனவே தனிமைப்படுத்தப்பட்ட 12 பொலிஸ் பிரிவுகள் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

அத்துடன், கம்பஹா மாவட்டத்தின் களனி பொலிஸ் பிரிவும் இன்று அதிகாலை 5 மணி முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கம்பஹா மாவட்டத்தில் ஏற்கனவே தனிமைப்படுத்தப்பட்ட நீர்கொழும்பு , ஜா-எல , ராகம, கடவத்தை, வத்தளை, பேலியகொடை ஆகிய பொலிஸ் பிரிவுகளும் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

இதனிடையே, கொழும்பில் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களாக அறிவிக்கப்பட்டுள்ள பகுதிகளில் அமைந்துள்ள இலங்கை முதலீட்டு சபை மற்றும் ஏற்றுமதி அபிவிருத்தி சபைக்கு உரித்தான தொழிற்சாலைகளை தொடர்ந்தும் நடத்திச் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மருதானை, கோட்டை, புறக்கோட்டை, கொம்பனித்தெரு , டேம் வீதி, வாழைத்தோட்டம் ஆகிய பொலிஸ் பிரிவுகளில் அமைந்துள்ள இலங்கை முதலீட்டு சபை மற்றும் ஏற்றுமதி அபிவிருத்தி சபை ஆகியவற்றில் செயற்படும் தொழிற்சாலைகள், குறித்த பகுதிகளில் இடம்பெறும் நீதிமன்ற அலுவல்கள் மற்றும் அத்தியாவசிய ஏனைய அரச நிறுவனங்கள், சுகாதார அதிகாரிகளின் கடுமையான கண்காணிப்பு மற்றும் ஆலோசனைகளின் கீழ் செயற்பட முடியும் என COVID-19 தொற்றை தடுக்கும் தேசிய செயற்பாட்டு நிலையம் அறிவித்துள்ளது.

எக்காரணத்திற்காகவும் குறித்த பொலிஸ் பிரிவுகளில் மொத்த வியாபார நிறுவனங்களை நடத்திச் செல்ல முடியாது என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

வர்த்தக நடவடிக்கைக்காக புறக்கோட்டைக்கு பிரவேசிக்கும் வாகனங்கள், மீகொடை, நாரஹேன்பிட்ட உள்ளிட்ட ஏனைய பொருளாதார மத்திய நிலையத்திற்கே செல்ல வேண்டும் என பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

இன்று காலை முதல் கொழும்பு மாவட்டத்திற்கு பிரவேசிப்பதற்கும் கொழும்பு மாவட்டத்திலிருந்து வௌியேறுவதற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

எனினும், கொழும்பு நகரை அண்மித்துள்ள பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதால், பயணத்தடைகள் விதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் கூறினார்.

கொழும்பில் பஸ் நிலையங்கள் மற்றும் ரயில் நிலையங்களில் மீண்டும் சேவைகள் இடம்பெறுகின்ற போதிலும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் பயணிகளுக்கு முற்றாக தடை விதிக்கப்பட்டுள்ளது.