நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 19 ஆயிரத்தை அண்மித்துள்ளது.கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 437 பேர் நேற்று (19) அடையாளங்காணப்பட்டனர்.
இவர்களில் கொழும்பு மாவட்டத்தில் 305 பேரும் களுத்துறை மாவட்டத்தில் 58 பேரும் உள்ளடங்குகின்றனர்.
இந்த நிலையில், மினுவாங்கொடை ஆடைத்தொழிற்சாலை மற்றும் பேலியகொடை மீன் சந்தை கொரோனா கொத்தணிகளில் இதுவரை 15,324 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அவர்களில் மினுவாங்கொடை கொத்தணியில் 3,059 பேரும் பேலியகொடை கொத்தணியில் 12,265 பேரும் உள்ளடங்குகின்றனர்.
அவர்களில் 9,478 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக COVID-19 தொற்று தடுப்பிற்கான தேசிய செயலணி தெரிவித்துள்ளது.
இதனடிப்படையில், நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 18,841 ஆக அதிகரித்துள்ளது.
இவர்களில் 5,867 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதேவேளை, கொரோனா தொற்றிலிருந்து மேலும் 316 பேர் நேற்று குணமடைந்தனர்.
இதனடிப்படையில், நாட்டில் குணமடைந்தோரின் எண்ணிக்கை 12,903 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, நாட்டில் கொரோனா தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 73 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா தொற்றால் நேற்று மேலும் நான்கு மரணங்கள் பதிவாகின.
27 மற்றும் 59 வயதான இரண்டு பெண்களும் 70 மற்றும் 86 வயதான இரண்டு ஆண்களும் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்த 27 வயதான யுவதிக்கு, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து அவர் முல்லேரியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கொரோனா தொற்றுடன் கல்லீரலில் ஏற்பட்ட பாதிப்பினால் அவர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அவர் கொழும்பு – 15 பகுதியை சேர்ந்தவரெனவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
களுத்துறை, பொக்குனுவிட்ட பகுதியை சேர்ந்த 59 வயதான பெண் தனது வீட்டிலேயே உயிரிழந்துள்ளார்.
கொரோனா தொற்றினால் ஏற்பட்ட நெஞ்சுவலி மற்றும் உயர் இரத்த அழுத்தம் காரணமாக அவர் உயிரிழந்துள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனிடையே, கொழும்பு – 10 ஐ சேர்ந்த 70 வயதான ஆண், கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
கொரோனா தொற்றுடன் ஏற்பட்ட நிமோனியா காரணமாக அவர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, 86 வயதான ஆண் ஒருவரும் கொரோனா தொற்றுடன் ஏற்பட்ட நெஞ்சு வலியினால் உயிரிழந்துள்ளதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
அவர் களுத்துறை – ஹல்தொட்ட பகுதியை சேர்ந்தவர் ஆவார்.
இதற்கமைவாக, நாட்டில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 73 ஆக அதிகரித்துள்ளது.
இதனிடையே, நேற்றைய தினம் 10,356 PCR பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டதாகவும் COVID-19 தொற்று தடுப்பிற்கான தேசிய செயலணி தெரிவித்துள்ளது