இளம் தொழில் முனைவோருக்கு இலவச காணித் துண்டுங்கள் வழங்கும் திட்டத்திற்காக வவுனியா பிரதேச செயலகத்தில் 21 ஆயிரம் விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.காணி முகாமைத்துவ அலுவல்கள் அரச தொழில் முயற்சிக் காணிகள் மற்றும் சொத்துக்கள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சினால் இளம் தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிப்பதற்காக அரச காணிகளில் முதலீட்டு வாய்ப்புக்களை வழங்கும் நிகழ்ச்சித்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இத் திட்டத்தின் கீழ் ஒரு இலட்சம் இளம் தொழில் முனைவோர்களுக்கு இலவச காணித்துண்டுகள் வழங்குவதற்கான விண்ணப்பங்கள் நாடு பூராகவும் கோரப்பட்ட நிலையில் வவுனியா பிரதேச செயலகத்தில் 21 ஆயிரம் பேர் காணி கோரி விண்ணப்பித்துள்ளனர்.

விவசாயம் மற்றும் பண்ணை அமைக்கும் தொழில் முயற்சிக்காகவே அதிகளவிலான இளைஞர், யுவதிகள் காணி கோரி விண்ணப்பித்துள்ளனர்.

இந்நிலையில், குறித்த விண்ணப்பங்கள் தொடர்பில் நேர்முகத் தேர்வு நடத்துவதற்கான ஆயத்த நடவடிக்கைகள் வவுனியா பிரதேச செயலகத்தால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.