இன்று (30) காலை வரை, கடந்த 24 மணித்தியாலத்திற்குள் புதிய கொவிட் – 19 தொற்றாளர்கள் 496 பேர் இனங்காணப்பட்டுள்ளனர்.

 

அவர்கள் அனைவரும் உள்நாட்டை சேர்ந்தவர்கள் ஆவர். அவர்களில் 167 பேர் கொழும்பு மாவட்டம், 56 பேர் கம்பஹா மாவட்டம் மற்றும் 53 பேர் புத்தளம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என கொவிட்- 19 பரவலை தடுப்பதற்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

இன்று (30) காலை 6.00 மணி வரை மினுவாங்கொடை ஆடைத் தொழிற்சாலை மற்றும் பேலியகொடை மீன் சந்தை கொத்தணியில் பதிவான முழு கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 19,942 பேர் ஆகும். அவற்றில் மினுவாங்கொடை ஆடைத் தொழிற்சாலையின் கொத்தணியில் 3,059 பேரும் பேலியகொடை மீன் சந்தையின் கொத்தணியில் 16,883 பேரும் உள்ளடங்குவர். அவர்களில் மொத்தம் 13,594 பேர் சுகமடைந்து வைத்தியசாலைகளை விட்டு வெளியேறியுள்ளனர்.

அதன் பிரகாரம் நேற்று 29 ஆம் திகதி வரை கொவிட் தொற்று நோய் காரணமாக மரணமடைந்தவர்களுடன் மொத்த கொவிட்-19 தொற்றாளர்களின் எண்ணிக்கை 23,483 ஆகும். அவர்களில் 17,001 பேர் பூரண சுகமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளனர். 6,366 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகள் மற்றும் நோயாளர் பராமரிப்பு மையங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இன்று காலை 6 மணியளவில் கடந்த 24 மணி நேரத்திற்குள் முழுமையாக சுகமடைந்த 346 பேர் வைத்தியசாலைகள் மற்றும் நோயாளர் பராமரிப்பு மையங்களில் இருந்து வெளியேறியுள்ளனர்.

இன்று காலை வரை கொவிட்-19 தொற்று நோய் காரணமாக மரணமடைந்த மொத்த நபர்களின் எண்ணிக்கை 116 ஆகும். நேற்று வரை, கொவிட்-19 தொற்று காரணமாக 07 மரணங்கள் பதிவாகியுள்ளது. அவர்கள் அகுரஸ்ஸ,கொதடுவ, மருதானை, கொழும்பு 02, சிலாபம் , மொறடுவ மற்றும் கொழும்பு 13, பிரதேசங்களை சேர்ந்தவர்கள் ஆவர்.

இன்று (30) காலை இந்தியாவில் இருந்து 6E 9031 விமானம் ஊடாக பயணி ஒருவரும், தோகா கட்டாரில் இருந்து QR 668 விமானம் ஊடாக 21 பயணிகளும், கொரியாவில் இருந்து KE 9034 விமான ஊடாக 275 பயணிகளும், ஜபானில் இருந்து UL 455 விமான ஊடாக 53 பயணிகளும் இலங்கை வருகை தந்துள்ளனர். அதேபோல் இன்று (30) காலை பகிஸ்தானில் இருந்து UL 186 விமான ஊடாக 03 பயணிகள் இலங்கை வரவுள்ளனர். வருகை தந்த அனைவரும் முப்படையினரால் நிர்வகிக்கப்படும் தனிமைப்படுத்தல் மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இன்று காலை வரை முப் படையினரால் நிர்வகிக்கப்படும் 54 தனிமைப்படுத்தல் மையங்களில் 5,537 பேர் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். நேற்று நவம்பர் 29 ம் திகதி மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதணைகளின் மொத்த எண்ணிக்கை 13,065 ஆகும்.