கிளிநொச்சி மாவட்டத்தில் 15 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் 785 குடும்பங்கள் தனிமைப்படுத்தலில் உள்ளன எனவும் கிளிநொச்சி மாவட்டச் செயலாளர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்தார்.கிளிநொச்சி மாவட்டத்தின் கொரோனா நிலவரம் தொடர்பான அவசரக் கலந்துரையாடல், மாவட்டச் செயலாளர் தலைமையில், மாவட்டச் செயலகத்தில் இன்று (30) நடைபெற்றது. அதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “கிளிநொச்சி மாவட்டத்தில் கடந்த வாரம் சமூகத் தொற்று உடைய கொரோனா நோயாளி ஒருவர் இனங்காணப்பட்டதையடுத்து, அவருடன் தொடர்புடையவர்களை இனங்கண்டு,  அவர்களை தனிமைப்படுத்துவது தொடர்பான செயற்பாடுகள் இடம்பெற்றிருந்தன. இவ்விடயம் தொடர்பாக கிளிநொச்சி மாவட்டத்திலே நாம் பாடசாலைகளையும்  ஒரு வாரம் நடத்தாமல் முடக்கியிருந்தோம்” என்றார்.

இதன் அடிப்படையில், கிளிநொச்சி  மாவட்டத்தில் 785 குடும்பங்கள் சுய தனிமைப்படுத்தலிலே உட்படுத்தப்பட்டுள்ளனர் எனவும் அவர்களில் 458 பேரது மாதிரிகள் பெறப்பட்டு, 13 பேர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது நேற்று (29) வரை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அத்துடன், இன்று (30) மேலும் இருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் மாவட்டச் செயலாளர் மேலும் தெரிவித்தார்.