இலங்கையில் கொவிட் 19 இரண்டாவது அலை ஆரம்பமானது தொடக்கம் இதுவரை கொழும்பு மாவட்டத்தில் பதிவான மொத்த கொவிட் 19 தொற்றாளர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்தை கடந்துள்ளது.அதன்படி, கடந்த ஒக்டோபர் மாதம் 04 ஆம் திகதியில் இருந்து இதுவரை கொழும்பில் 10,140 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

கடந்த 24 மணித்தியாலங்களில் வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 878 பேர் புதிதாக அடையாளம் காணப்பட்டதை அடுத்து நாட்டின் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 25,409 ஆக அதிகரித்துள்ளதாக கொவிட்-19 பரவல் தடுப்பு செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

நேற்றைய தினம் கொழும்பு மாவட்டத்தை சேர்ந்த 402 பேரும், கம்பஹா மாவட்டத்தில் 188 பேரும், களுத்துறை மாவட்டத்தை சேர்ந்த 98 பேரும் அடையாளம் காணப்பட்டனர்.

களுத்துறையில் பதிவான அனைவரும் அடுலுகம பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, கண்டியில் 27 தொற்றாளர்களும் , குருணாகலையில் 24 தொற்றாளர்களும், இரத்தினபுரியில் 24 தொற்றாளர்களும் மற்றும் புத்தளத்தில் 29 தொற்றாளர்களும் பதிவாகியுள்ளனர்.

மினுவாங்கொடை மற்றும் பேலியகொடை கொத்தணியில் வைரஸ் தோற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 21,861 ஆக அதிகரித்துள்ளது .

கடந்த 24 மணித்தியாலங்களில் 487 பேர் குணமடைந்து வைத்தியசாலையில் இருந்து வீடு திரும்பியுள்ளதாக கொவிட்-19 பரவல் தடுப்பு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 18,304 ஆக உயர்வடைந்துள்ளது. தொடர்ந்தும் 6,982 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகினறனர்.

கடந்த 24 மணித்தியாலங்களில் வைரஸ் தொற்றுக்குள்ளான 2 பேர் உயிரிழந்துள்ளனர். இதற்கமைய நாட்டில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 124 ஆக அதிகரித்துள்ளது.