கொழும்பிலிருந்து கொரோனா வைரஸ் தொற்றாளர்களை ஏற்றிச்சென்ற பஸ், பொலன்னறுவை – வெலிக்கந்தை பகுதியில் விபத்துக்குள்ளாகியுள்ளது.இரண்டு பஸ்கள் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

கொழும்பிலிருந்து மட்டக்களப்பு – புனானை கொரோனா சிகிச்சை நிலையத்திற்கு 23 பேரை ஏற்றிச் சென்ற பஸ் ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

இரண்டு பஸ்களினதும் சாரதிகள் மற்றும் பஸ்ஸில் ஏற்றிச்சென்ற கொரோனா நோயாளர்களில் இருவரும் காயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறியுள்ளார்.

காயமடைந்தவர்கள் பொலன்னறுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஏனைய அனைவரும் திட்டமிட்டவாறு புனானை சிகிச்சை நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

வெலிக்கந்தை பொலிஸார் விபத்து தொடர்பில் விசாரணைகள் முன்னெடுத்து வருகின்றனர்.