நேற்றைய அமைச்சரவை கூட்டத்தின் போது சில தீர்மானங்கள் எட்டப்பட்டன. நாட்டில் உள்ள தேசிய பாடசாலைகளை 1000 ஆக உயர்த்துவது தொடர்பில் முன்வைக்கப்பட்ட பத்திரத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.இதற்கு பொருத்தமான வேலைத்திட்டங்களை மேற்கொள்வதற்காக அமைச்சரவையினால் கொள்கை ரீதியலான அங்கீகாரம் கடந்த வருடம் டிசம்பர் மாதம் 10 ஆம் திகதி வழங்கப்பட்டது.

இந்த வேலைத்திட்டம் 3 கட்டங்களாக முன்னெடுக்கப்படவுள்ளன.

முதலாம் கட்டத்தின் கீழ், தற்போது எந்தவொரு தேசிய பாடசாலையும் இல்லாத 123 பிரதேச செயலக பிரிவுகளில் ஒரு மாகாண பாடசாலை வீதம் தெரிவு செய்து தேசிய பாடசாலையாக அபிவிருத்தி செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இரண்டாம் கட்டமாக, அடையாளம் காணப்படும் 673 பாடசாலைகளை தேசிய பாடசாலையாக தரமுயர்த்த அமைச்சரவை அங்கீகாரமளித்துள்ளது.

மூன்றாம் கட்டத்தின் கீழ், 373 தேசிய பாடசாலைகளை மேலும் தரமுயர்த்தும் நோக்கில் வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்தவும் அமைச்சரவை அனுமதியளித்துள்ளது.

இதனிடையே, இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் நடைமுறைப்படுத்தப்படும் நான்கு வீடமைப்புத் திட்டங்களுக்கு பணம் செலுத்தும் பொறிமுறையை திருத்தம் செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கான வீடமைப்புக்காக, இந்திய அரசாங்கத்தினால் வேலைத்திட்டத்திற்காக 300 மில்லியன் ரூபா நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.

இந்த வேலைத்திட்டம் தேசிய வீடமைப்பு அதிகார சபையினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இதனை நடைமுறைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவினால் சமர்ப்பிக்கப்பட்ட பத்திரத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

இதேவேளை, இலங்கையின் பயிர்ச் செய்கையை அதிகரிப்பதற்கு தேவையான தரமான விதை உற்பத்தியை மேம்படுத்தும் நோக்கில் வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்த விவசாய அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பத்திரத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

இதேவேளை, சொய்சாபுர மீள் வீடமைப்புத்திட்டத்தின் கீழ் 30 வீடுகளை கொண்ட இரண்டு கட்டடங்களை அமைக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

இதனடிப்படையில், சொய்சாபுர குடியிருப்பு திட்டத்தில் உள்ள சேதமடைந்த இரண்டு மாடிக்கும் குறைந்த 48 வீடுகள் மற்றும் 24 சட்டவிரோத குடிசைகள் என்பனவற்றை புனர்நிர்மாணம் செய்யும் நோக்கில் 20 வீடுகளை கொண்ட 05 கட்டடங்கள் அமைக்கப்படவுள்ளன.

மேலும், ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலைகழகத்தின் பொறியியல் பீட கட்டடத்தை நிர்மாணிப்பது தொடர்பில் கல்வி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பத்திரத்திற்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளது.

விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப மனிதவள அபிவிருத்தி திட்டத்தின் கீழ் பல்கலைக்கழகத்தின் பொறியியல் கட்டடத்தை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.