நாட்டில் நேற்றைய தினம் கொவிட் 19 தொற்றால் பீடிக்கப்பட்ட 697 பேரில் 357 பேர் கொழும்பு மாவட்டத்திலேயே பதிவாகியுள்ளனர். அவர்களில் 128 பேர் மட்டக்குளி பகுதியில் அடையாளங்காணப்பட்டுள்ளனர். அத்துடன் பொரளை பகுதியில் நேற்றைய தினம் 110 பேருக்கு கொவிட் 19 தொற்றுறுதியாகியுள்ளது. அதேநேரம் கொழும்பு மாவட்டத்திற்கு அடுத்தப்படியாக கம்பஹா மாவட்டத்தில் 209 பேர் கொரோனா வைரசால் பீடிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 55 பேர் மஹர பகுதியிலும் 54 பேர் கட்டுநாயக்க பகுதியிலும் 47 பேர் மஹபோல பகுதியிலும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அத்துடன் கண்டி மாவட்டததில் 38 பேருக்கும், களுத்துறை, புத்தளம் ஆகிய மாவட்டங்களில் தலா 16 பேருக்கும், இரத்தினபுரி மாவட்டத்தில் 10 பேருக்கும் நுவரெலியாவில் 3 பேருக்கும் நேற்றைய தினம் கொவிட் 19 தொற்றுறுதியாகியுள்ளது. இதேவேளை, அம்பகமுவ சுகாதார வைத்திய பணிமனைக்கு உட்பட்ட கினிகத்தேனை – பிளக்வோட்டர் மேல் பிரிவில் நான்கு பேருக்கும், மஸ்கெலியா சுகாதர வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட டிக்கோயா – வனராஜா கீழ் பிரிவில் ஒருவருக்கும் கொவிட்-19 தொற்றுதியானது.

அந்த வகையில் கினிகத்தேனை – கெனில்வத்தை – பிளக்வோட்டார் கீழ் மற்றும் மேல் பிரிவுகளில் இதுவரையில் 39 கொவிட்-19 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணிய 475 பேருக்கு பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு அதன் மாதிரிகள் நுவரெலியாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. பிளக்வோட்டர் தோட்டத்திற்கு நடமாட்டத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

கொவிட்-19 தொற்றுறுதியானவர்கள் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதேவேளை கடந்த 6 ஆம் திகதி நோர்வூட் தமிழ் மகா வித்தியாலய ஆசிரியை ஒருவருக்கு தொற்று அடையாளம் காணப்பட்டதையடுத்து அந்த பாடசலையின் ஆசிரியர்கள், மாணவர்கள் அடங்கலாக 160 பேருக்கு பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

எனினும், எவருக்கும் கொவிட்-19 தொற்றுறுதியாகவில்லை என மஸ்கெலியா பொது சுகாதார காரியாலய அதிகாரிகள் தெரிவித்தனர். இதேவேளை, கிழக்கு மாகாணத்தில் நேற்றைய தினம் 16 பேருக்கு கொவிட் 19 தொற்றுறுதியாகியுள்ளதாக மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் அழகையா லதாகரன் தெரிவித்துள்ளார்.