சர்வதேச மனித உரிமைகள் தினமான இன்று வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் முல்லைத்தீவில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர். முல்லைத்தீவு மாவட்டத்தில் கடந்த 2017 மார்ச் 8ம் திகதி ஆரம்பித்த தொடர் கவனயீர்ப்பு போராட்டமானது இன்று 1373வது நாளாக தொடர்ந்து முன்னெடுக்கப்படுகின்றது. முல்லைத்தீவு மாங்குளம் வீதியில் அமைந்துள்ள காணாமற் போனவர்களின் உறவுகள் தொடர் போராட்டம் நடாத்திவரும் கட்டிடத்துக்கு முன்பாக இப்போராட்டம் இடம்பெற்றது. இந்நிலையில் இன்றைய சர்வதேச மனித உரிமை நாளில் எமது உறவுகளின் நிலை அறியும் அடிப்படை உரிமைகளை கூட இழந்து தவிக்கின்றோம் என்கின்ற நிலையில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் குறித்த கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்தனர். போராட்டத்தின் இறுதியில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையத்தின் உயர்ஸ்தானிகர் அவர்களுக்கு மகஜர் ஒன்றும் அனுப்பி வைக்கப்படவிருந்தது.

இதேவேளை சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் ஏற்பாட்டில் கவனயீர்ப்பு போராட்டம் இன்று யாழ்ப்பாணத்திலும் இடம்பெற்றது. நாவலர் வீதியில் அமைந்துள்ள அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் ஆணையகத்துக்கு முன்பாக இந்த ஆர்ப்பாட்டம் இன்றுமுற்பகல் இடம்பெற்றது. வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகள் தொடர்பில் சர்வதேசமும் ஐ.நாவும் நீதியை வழங்கவேண்டும் என்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் வலியுறுத்தியிருந்தனர்.

அத்துடன் சர்வதேச மனித உரிமைகள் தினமான இன்று வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தினால் கிளிநொச்சியிலும் கவனஈர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது. குறித்த போராட்டம் இன்றுகாலை 10 மணியளவில் கிளிநொச்சியில் அமைந்துள்ள மாவட்ட காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்திற்கு முன்பாக இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை மன்னார் மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகம் ஊடாக மன்னார் பஸார் வீதி வரை முன்னெடுக்கப்பட்டது. தொடர்ந்து மன்னார் புதிய பஸ் தரிப்பிடத்திற்கு முன்பாக அமைதியான முறையில் போராட்டம் இடம்பெற்றது. இதேநேரம், திருகோணமலை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று அன்புவளிபுரம் ஞானபைரவர் ஆலய முன்றலில் நடைபெற்றது.ஆலயத்தில் இடம்பெற்ற பூஜையை தொடர்ந்து எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் வலுப்பெற்றது.