இலங்கை – இந்திய மீனவர் பிரச்சினை தொடர்பான பேச்சுவார்த்தைக்கான திகதி நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக கடற்றொழில் அமைச்சு அறிவித்துள்ளது.அதற்கமைய, எதிர்வரும் 22 மற்றும் 30 ஆம் திகதிகளில் இந்த பேச்சுவார்த்தையை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கடற்றொழில் அமைச்சின் ஊடகப் பிரிவு வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

COVID-19 காரணமாக காணொளி கலந்துரையாடலூடாக பேச்சுவார்த்தையை நடத்த இலங்கை, இந்திய அதிகாரிகள் தீர்மானித்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருநாடுகளுக்கும் இடையிலான மீனவர் பேச்சுவார்த்தைகள் இழுபட்டு வந்ததையடுத்து தற்போது பேச்சுவார்த்தையை நடத்துவதற்கான திகதி தீர்மானிக்கப்பட்டுள்ளது.

எல்லை தாண்டி இலங்கை கடற்பரப்பிற்குள் வருகின்ற இந்திய கடற்றொழிலாளர்கள், தடை செய்யப்பட்ட இழுவை வலை தொழிலில் ஈடுபட்டு வருவதாக கடற்றொழில் அமைச்சு வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனால் கடல் வளங்களுக்கு பாதிப்பு ஏற்படுவதுடன், இலங்கை கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்படுகிறது.

இந்திய மீனவர்களின் எல்லை தாண்டிய செயற்பாடுகளை கட்டுப்படுத்துவதற்கு பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும் இதுவரை காத்திரமான பலன் எதுவும் கிடைக்கவில்லை என கடற்றொழில் அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், கடந்த ஜனவரி மாதம் இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்ட போது, இருநாட்டு மீனவர்களின் பிரச்சினைக்கான தீர்வு திட்ட வரைபொன்று இந்திய பிரதமரிடம் கையளிக்கப்பட்டதாகவும், அதற்கு அந்நாட்டு அதிகாரிகள் ஆதரவு தெரிவித்துள்ளதாகவும் கடற்றொழில் அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.