இலங்கை சனத்தொகையில் 10 வீதமானவர்களுக்கு கொரோனா தொற்று ஒழிப்பிற்கான தடுப்பூசியை வழங்க உலக சுகாதார ஸ்தாபனம் தீர்மானித்துள்ளது.

மத்திய மற்றும் குறைந்த வருமானம் பெறும் நாடுகளுக்கு ஒரு பில்லியன் தடுப்பூசிகளை வழங்கும் செயற்றிட்டத்தின் கீழ் , சுகாதார ஸ்தாபனத்தால் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.

இந்த செயற்றிட்டத்திற்கு தயாராகுமாறு உலக சுகாதார ஸ்தாபனத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளதாக பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் , விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் குறிப்பிட்டார்.

தடுப்பூசி வழங்கப்படும் என உறுதியளிக்கப்பட்டுள்ள போதிலும், இலங்கைக்கு எப்போது அவை விநியோகிக்கப்படும் என எவ்வித தகவல்களும் கிடைக்கவில்லை என அவர் கூறினார்.

எவ்வாறாயினும், கொரோனா ஒழிப்பிற்கான தடுப்பூசி கிடைக்கப்பெற்றவுடன் அதனை பயன்படுத்துவதாயின் அதற்கு தேவையான உட்கட்டமைப்பு வசதிகள் அனைத்தும் தயார் நிலையில் காணப்படல் வேண்டும் என விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.

இதேவேளை, 10 வீதமானவர்களுக்கு மாத்திரமே தடுப்பூசி கிடைக்கப்பெற்றால் எவ்வாறான முன்னுரிமையின் அடிப்படையில் இவற்றை பெற்றுக்கொடுப்பது என்ற தீர்மானமும் மேற்கொள்ளப்பட வேண்டும் என அவர் கூறினார்.

எந்த ரக தடுப்பூசி கிடைக்கப்பெறும் என இதுவரை உறுதியான தகவல் கிடைக்கவில்லை எனவும், எவ்வாறாயினும் COVID-19 தடுப்பூசியை களஞ்சியப்படுத்த (-)80 பாகை செல்சியஸ் குளிரூட்டி அவசியம் எனவும் பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் , விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் சுட்டிக்காட்டினார்.

COVAX செயற்றிட்டத்தின் கீழ் குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் பெறும் நாடுகளுக்காக ஒரு பில்லியன் கொரோனா தடுப்பூசிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனத்தின் தலைமை அதிகாரி Tedros Adhanom Ghebreyesus நேற்று உத்தியோகபூர்வமாக அறிவித்திருந்தார்.

இந்த செயற்றிட்டத்தில் 189 நாடுகள் உள்ளடக்கப்பட்டுள்ளன