ஃபைசர் & பயோஎன்டெக் நிறுவனம் இணைந்து தயாரித்த கொரோனா தடுப்பு மருந்தின் அவசர பயன்பாட்டுக்கு அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு அமைப்பான எஃப்.டி.ஏ அனுமதி வழங்கி இருக்கிறது.

இந்த கொரோனா வைரஸ் தடுப்பு மருந்தை அனுமதிக்க, டிரம்ப் அரசு நிர்வாகத்தால், எஃப்.டி.ஏ அமைப்பு கடுமையான அழுத்தத்துக்கு உள்ளாக்கப்பட்டது.ன

வெள்ளிக்கிழமைக்குள் கொரோனா தடுப்பு மருந்தை அனுமதிக்க வேண்டும் அல்லது பதவியில் இருந்து விலக வேண்டும் என எஃப்.டி.ஏ அமைப்பின் தலைவரான ஸ்டீஃபன் ஹானிடம் கூறப்பட்டதாகச் செய்திகள் வெளியானது. ஆனால் அது உண்மை இல்லை என அவரே அமெரிக்க ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.

அடுத்த 24 மணி நேரங்களுக்குள் முதல் கொரோனா தடுப்பு மருந்து வழங்கப்படும் எனக் கூறியிருக்கிறார் அதிபர் டிரம்ப். அமெரிக்காவில் கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 2,92,000-த்தைக் கடந்துவிட்டது.

அமெரிக்காவில் பொது மக்களுக்கு தடுப்பூசி வழங்கும் திட்டத்தை, திங்கள் அல்லது செவ்வாய் முதல் தொடங்க, தாங்கள் ஃபைசர் நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றுவோம் என சுகாதார மற்றும் மனிதாபிமான சேவைகள் துறையின் செயலர் அலெக்ஸ் அசார் நேற்று (வெள்ளிக்கிழமை) தெரிவித்து இருந்தார்.

இந்த ஃபைசர் கொரோனா தடுப்பு மருந்து, பிரிட்டன், கனடா, பஹ்ரைன், செளதி அரேபியா போன்ற நாடுகளின் அரசு ஒழுங்காற்று அமைப்பினரால், ஏற்கனவே அனுமதிக்கப்பட்டு இருக்கிறது. (நன்றி: பிபிசி)