வவுனியாவில் நேற்று ஏழு பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

அந்தவகையில், புதிய சாளம்பைக்குளத்திலிருந்து மூன்று பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதிசெய்யப்பட்டிருந்தது.

வவுனியா விளக்கமறியல் சிறைச்சாலையில் இருந்த கைதி ஒருவருக்கு கொவிட்-19 உறுதிசெய்யப்பட்டிருந்தது. திருகோணமலையை சேர்ந்த குறித்த நபருக்கு கடந்த சனிக்கிழமை பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்வதற்கான மாதிரிகள் பெறப்பட்டிருந்தது. இன்று பரிசோதனைக்கான முடிவு கிடைக்கப்பெற்றது.

இவற்றைவிட வவுனியா கற்குழியை சேர்ந்த 15 வயதான பாடசாலை மாணவி, திருநாவற்குளத்தை சேர்ந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவருக்கும் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.குறித்த இருவரும் சுகவீனம் காரணமாக வவுனியா வைத்தியசாலைக்கு சென்ற நிலையில் எழுமாறாக அவர்களிடம் மேற்கொண்ட பி.சி.ஆர் பரிசோதனையில் அவர்களிற்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இவற்றைவிட பம்பை மடு தனிமைப்படுத்தல் மையத்தில் உள்ள தெற்கைச் சேர்ந்த கர்ப்பிணி ஒருவருக்கும் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இதேவேளை, கற்குழி, திருநாவற்குளம் பகுதிகளில் தொற்று உறுதியானவர்களின் வீடுகளில் பொலிஸார் பாதுகாப்புக் கடமைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.