வட மாகாணத்திலுள்ள 130 இடைநிலைப் பாடசாலைகளுக்கு மறு அறிவித்தல் வரை விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக மாகாண கல்விப் பணிப்பாளர் குறிப்பிட்டார்.

கொரோனா தொற்று அதிகரிப்பினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக வட மாகாண கல்வி பணிப்பாளர் எஸ்.உதயகுமார் தெரிவித்தார்.

அதற்கமைய, வவுனியா தெற்கு கல்வி வலயத்தில் 05 பாடசாலைகளுக்கும் யாழ்ப்பாணம் கல்வி வலயத்தில் 69 பாடசாலைகளுக்கும் வலிகாமம் கல்வி வலயத்தில் 66 பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

மறு அறிவித்தல் வரை இந்த பாடசாலைகளின் கல்வி செயற்பாடுகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் வட மாகாண கல்வி பணிப்பாளர் குறிப்பிட்டார்.

எவ்வாறாயினும், வட மாகாணத்திலுள்ள 535 இடைநிலைப் பாடசாலைகளில் 395 பாடசாலைகள் தொடர்ந்தும் இயங்குவதாக அவர் தெரிவித்தார்.

விடுமுறை வழங்கப்பட்டுள்ள இடைநிலைப் பாடசாலைகளின் கற்றல் செயற்பாடுகள் சுகாதார தரப்பினரின் அறிவுறுத்தல்களுக்கு அமைய மீள ஆரம்பிக்கப்படும் என வட மாகாண கல்வி பணிப்பாளர் எஸ்.உதயகுமார் குறிப்பிட்டார்.