கிராமிய வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை இராஜாங்க அமைச்சர் இந்திக்க அநுருத்த மற்றும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் ஆகியோர் உடன்படிக்கை ஒன்றில் இன்று கைச்சாத்திட்டனர்.இந்திய வீடமைப்பு உதவித் திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்படும் நான்கு மாதிரி கிராமிய வீடமைப்புத் திட்டங்கள் தொடர்பில் கடந்த அரசாங்கத்துடன் கைச்சாத்திடப்பட்ட உடன்படிக்கை திருத்தப்பட்டு, இன்று மீண்டும் கைச்சாத்திடப்பட்டது.

கடந்த ஆட்சிக்காலத்தில் இந்திய உதவியாக 100 வீடுகளுக்கான நிதி வழங்கப்பட்டிருந்தது. எனினும், வீடுகளை நிர்மாணிப்பதில் சில குறைபாடுகளை அவதானித்து, திருத்தங்களை மேற்கொண்டு, அதில் கைச்சாத்திட்டதாக கிராமிய வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை இராஜாங்க அமைச்சர் இந்திக்க அநுருத்த குறிப்பிட்டார்.

மேலும், கிழக்கு முனைய நடவடிக்கை தொடர்பில் இந்தியாவுடன் வௌிப்படைத்தன்மை உள்ளதாகவும் அதற்கமைய அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படும் எனவும் இந்திக்க அநுருத்த கூறினார்.

இருதரப்பு உடன்படிக்கைக்கு அமைய இந்திய அரசாங்கம் வீட்டுத்திட்ட உதவியை வழங்குகின்றது. எனினும், வீட்டுத்திட்ட உதவியை வழங்கிவிட்டு, பின்னர் அதிகமாக எதனையும் எம்மிடமிருந்து பெற்றுக்கொள்ள இடமளிக்கப் போவதில்லை என அவர் மேலும் தெரிவித்தார்.