திருகோணமலை மாவட்டத்தில், பாடசாலை மாணவர்கள் 6 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக, கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி டொக்டர் அழகையா லதாகரன் தெரிவித்தார்.

இந்த பாடசாலை மாணவர்கள் 6 பேரிலும் திருகோணமலை ஜமாலியாவில் 04 பேரும்,  கிண்ணியாவில் 02 பேரும் அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர் எனவும் அவர் தெரிவித்தார்.

திருகோணமலையில் உள்ள கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் திணைக்களத்தில்,  இன்று (21) ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றை மேற்கொண்டிருந்த அவர், திருகோணமலை மாவட்டம் உட்பட கிழக்கு மாகாணத்தின் கொரோனா நிலைமை தொடர்பில் விளக்கமளித்தார்.

இதன்போது அவர் தகவல் உரைக்கையில், “திருகோணமலை ஜமாலியா இறைச்சிக் கடையில் பணிபுரிபவரின் உறவினர்கள் மேலும் 15 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனால், கிழக்கில் இதுவரை 778 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

“திருகோணமலையில் 40 பேரும்,  மட்டக்களப்பில் 102 பேரும்,  அம்பாறையில் 23 பேரும்,  கல்முனையில் 613 பேருக்கும் தொற்று இருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது” என்றார்.