அக்கரைப்பற்று பிரதேசத்தில் கொவிட் தொற்று வீதம் குறைந்துள்ள அதேவேளை, கல்முனை மாநகர சபை பிரதேசங்களில் தொற்றாளர்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்து வருகின்றது.

அடுத்த சில நாட்களில் இப்பிரதேசங்களில் கொரோனா வைரஸ் தொற்று இன்னும் தீவிரமாக பரவும் அபாயம் ஏற்பட்டிருப்பதாகவும் இப்பிரதேசங்கள் அபாய வலயமாக அறிவிக்கப்படுவதாகவும் சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது.

இது குறித்து பள்ளிவாசல்கள் மற்றும் கோவில்களில் ஒலிபெருக்கிகள் மூலம் தொடர்ச்சியாக மக்களை விழிப்பூட்டும் அறிவுறுத்தல்களை சுகாதார வைத்திய அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

இன்று (22) முற்பகல் 10 மணி வரை கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட 03 சுகாதார வைத்தியப் பிரிவுகளில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை 125ஆக அதிகரித்திருப்பதாக கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் ஜீ.சுகுணன் தெரிவித்தார்.

இதன்படி, கல்முனை தெற்கு சுகாதார வைத்தியப் பிரிவில் 87 பேரும் கல்முனை வடக்கு சுகாதார வைத்தியப் பிரிவில் 10 பேரும் சாய்ந்தமருது பிரதேசத்தில் 28 பேரும் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். இப்பகுதிகளில் தொடர்ந்தும் பிசிஆர் மற்றும் அன்டிஜென் பரிசோதனைகள் மும்முரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதேவேளை, சாய்ந்தமருதை சேர்ந்த 58 வயது நிரம்பிய ஆண் ஒருவர், நேற்று முன்தினம் (21) அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், திடீரென உயிரிழந்துள்ளார். இதையடுத்து மேற்கொள்ளப்பட்ட ரெபிட் அன்டிஜென் பரிசோதனையின்போது, அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதாக, சாய்ந்தமருது பிரதேச மேற்பார்வை சுகாதாரப் பரிசோதகர் ஜே.எம்.நிஸ்தார் தெரிவித்தார்.

இவரது ஜனாஸா, அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டிருப்பதாக வைத்திய அத்தியட்சகர் டொக்டர் ஏ.எல்.எப்.ரஹ்மான் தெரிவித்தார். அத்துடன், கடந்த 10ஆம் திகதி உயிரிழந்த சம்மாந்துறை நபரின் ஜனாஸாவும் இங்கேயே தொடர்ந்தும் வைக்கப்பட்டிருப்பதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.