கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி மரணிக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களைக் கட்டாய தகனம் செய்வதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியும் அதன் பங்காளிக் கட்சிகளும் இணைந்து, அமைதியான முறையில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டமென்றை, பொரளையில் முன்னெடுத்திருந்தன.

பொரளை, கனத்தை மயானத்தின் முன்வாயிலின் முன்பாகவே இந்த அமைதிப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதில், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள், அங்கத்தவர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதேவேளை, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீமும் அவரோடு இணைந்த கட்சியின் அங்கத்தவர்களும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிஷாட் பதியூதீனும் அங்கத்தவர்களும் எதிரணியில் இருக்கும் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும் அமைதிப் போராட்டத்தில் பங்கேற்றனர்.

‘வலுக்கட்டாயமாகத் தகனம் செய்வதை நிறுத்தவும் மத உரிமைகளுக்கு மதிப்பளிக்கவும்’ என்ற தொனிப்பொருளில் முன்னெடுக்கப்பட்ட அமைதிப் போராட்டத்தில் பங்கேற்றிருந்தவர்கள், ‘கட்டாய தகனத்தை நிறுத்து’ என எழுதப்பட்டிருந்த முகக் கவசங்களையும் அணிந்திருந்தனர்.

இதேவேளை,  ‘சடலங்களுக்குச் சுதந்திரம் இல்லை’, ‘மனித உரிமைகளை மதி’, ‘அரசாங்கமே மனித உரிமைகளுக்கு மதிப்பளி’ உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகளையும் ஏந்திநின்றனர்.

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி  மரணமடைந்த 20 நாள்களான சிசு, பெற்றோரின் அனுமதியைப் பெற்றுக்கொள்ளாமல், பொரளை கனத்தை மயானத்தில் வைத்து தகனம் செய்யப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

அத்துடன், கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி மரணிக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை, உறவினர்கள் பொறுப்பேற்காவிடின் அவ்வாறான சடலங்களும் இந்த மயானத்திலேயே பலவந்தமாகத் தகனம் செய்யப்பட்டன. எனினும், அந்த நடவடிக்கை பின்னர் கைவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 இந்நிலையில், முஸ்லிம்களின் ஜனாஸாக்களை எரியூட்டுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, பல்வேறு வழிகளிலும் எதிர்ப்புக் குரல்கள் கொடுக்கப்படுகின்றன.
கபனின் ஒரு பகுதியான வெள்ளைத் துணியூடாக மண்ணறையை மறுப்பவர்களுக்கு அறிவூட்டும் அமைதியான அடையாள எதிர்ப்புப் போராட்டம் நாடளாவிய ரீதியில் இடம்பெற்று வருகின்றது.

அத்துடன், இஸ்லாத்தின் இறுதிக்கடமையான ஹஜ் பணயத்தின்போது  அணிகின்ற தைக்காத வெள்ளைப் புடைவை அணிந்திருந்தவாறு, கவனயீர்ப்பு நடைபவனியும் முன்னெடுக்கப்படுகின்றது. முஸ்லிம்களின் ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்வதற்கு அனுமதிக்குமாறே, இப்போராட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.