கொத்தமல்லி என குறிப்பிட்டு விவசாய ஆலை கழிவுத் தொகையொன்று கொழும்பு துறைமுகத்திற்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.

குறித்த கழிவுத் தொகை உக்ரேனிலிருந்து இலங்கைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக சுங்கம் தெரிவித்துள்ளது.

கோரப்பட்டிருந்த சுமார் 7 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய கொத்தமல்லி தொகைக்கு பதிலாக குறித்த கழிவுத் தொகை அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக சுங்க ஊடக பேச்சாளர் சுனில் ஜயரத்ன தெரிவித்தார்.

இதேவேளை உக்ரைனிலிருந்து நாட்டிற்கு கொண்டுவரப்பட்ட விவசாயக் கழிவுகள் அடங்கிய கொள்கலன்கள் தொடர்பில் பாசல் (Basel) மாநாட்டு அலுவலகத்திற்கு முறைப்பாடு செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

கொத்தமல்லி என்ற போர்வையில் தனியார் நிறுவனமொன்றினால், விவசாயக் கழிவுகள் அடங்கிய கொள்கலன்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக சுற்றாடல் அமைச்சு தெரிவித்துள்ளது.

இவ்வாறான 28 கொள்கலன்கள் தொடர்பில் Basel மாநாட்டு அலுவலகத்திற்கு முறைப்பாடு செய்யுமாறு சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர, அமைச்சின் செயலாளர் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்கவிற்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

Basel ஒப்பந்தத்திற்கு அமைய ஒரு நாட்டிலிருந்து மற்றுமொரு நாட்டிற்கு விவசாயக் கழிவுகளை ஏற்றுமதி செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், இந்த ஒப்பந்தத்தில் இலங்கையும் கைச்சாத்திட்டுள்ளது.

இறக்குமதி செய்யப்பட்ட விவசாயக் கழிவுகளூடாக இலங்கையின் சூழல் கட்டமைப்பிற்கு பாரிய அச்சுறுத்தல் ஏற்படக்கூடும் என சுற்றாடல் அமைச்சு தெரிவித்துள்ளது.

இதனால் இறக்குமதி செய்யப்பட்டுள்ள அனைத்து கொள்கலன்களையும் உக்ரைனுக்கு மீள ஏற்றுமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் சுற்றாடல் அமைச்சு அறிவித்துள்ளது.