திருகோணமலை மாவட்டத்தில் கனமழை காராணமாக 1,911 குடும்பங்களைச் சேர்ந்த 6,617 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் சமன் தர்சன பாண்டிகோராள தெரிவித்தார்.

இவர்களுள் அதிகபட்சமாக பட்டினமும் சூழலும் பிரதேச செயலகப்பிரிவில் 1,104 குடும்பங்களின் 3,849 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,380 குடும்பங்களைச் சேர்ந்த 4,829 பேர் உறவினர் வீடுகளில் தங்கியிருந்ததுடன் மொத்தமாக 4 வீடுகள் முழுமையாகவும் 43 வீடுகள் பகுதியளவிலும் பாதிக்கப்பட்டுள்ளதாக அரசாங்க அதிபர் மேலும் தெரிவித்தார்.

பாதிக்கப்பட்ட வீடுகளது இழப்புக்கள் பிரதேச செயலகம் மூலம் மதிப்பீடு செய்யப்பட்டு உரிய அமைச்சின் கவனத்திற்கு கொண்டுவரப்படவுள்ளதாகவும் ,முதல்கட்டமாக பாதிக்கப்பட்ட வீட்டுடமையாளர்களுக்கு 10,000 ரூபா முற்பணம் வழங்கப்படவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

அரசாங்க அதிபருடன் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் மாவட்ட செயலகப்பிரிவின் உதவிப்பணிப்பாளர் கே.சுகுணதாஸ் உட்பட் அதிகாரிகள் பலர் வெள்ளநீர் தேங்கிய குடிமனை சார் பிரதேசங்களில் நீரை வெளியேற்ற கடும்பிரயத்தனத்தை மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

(அரசாங்க தகவல் திணைக்களம்)