கொழும்பு நகர சபையின் அதிகாரத்துக்கு உட்பட்ட பகுதிகளில், கடந்த 6 மாதங்களுக்குள் 78 பேர், கொரோனா வைரஸ் தொற்றால், வீட்டுக்குள்ளேயே உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளனர் என, கொழும்பு நீதிமன்ற வைத்திய அதிகாரி அஜித் தென்னகோன் தெரிவித்துள்ளார்.

அத்துடன், வீடுகளுக்குள் உயிரிழந்தவர்களுக்கு முன்னெடுக்கப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையின் போது, 78 பேருக்கும் தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது என்றார்.

வீடுகளில் உயிரிழப்பவர்களுக்கான பி.சி.ஆர் பரிசோதனைகள், இவ்வருடம் ஜூன் மாதத்திலிருந்து ஆரம்பிக்கப்பட்டது. அதற்கமைய வீடுகளில் மரணமடைந்த முதலாவது கொரோனா மரணம், ஒக்டோபர் 26ஆம் திகதி பதிவானது எனத் தெரிவித்துள்ள அவர், அன்றிலிருந்து டிசெம்பர் 27ஆம் திகதி வரை, 78 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் வீடுகளிலேயே  மரணமானமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்றார்.

அத்துடன், இந்த மாதம் முதலாம் திகதியிலிருந்து 25ஆம் திகதி வரை மாத்திரம்,  வீடுகளில் 130 பேர் உயிரிழந்தனர் என, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் பதிவாகியுள்ளது. அதில் 37 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்தமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.