சகல விடயங்களையும் ஆழமாக ஆராய்ந்தே, 2021ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 11ஆம் திகதி, பாடசாலைகளைத் திறப்பது தொடர்பாக அரசாங்கத்தால் தீர்மானிக்கப்பட்டது என, கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்தார்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சி அலுவலகத்தில் நேற்று (28)  நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

‘பாடசாலைகளை மீளவும் திறக்கும் விவகாரத்தில் எந்தவோர் அரசியல் தேவைப்பாடும் அரசாங்கத்துக்கு இல்லை’ என்றார்.

பாடசாலைகள் திறக்கப்படாமை குறித்து, தினமும் அதிகளவான கடிதங்கள், மின்னஞ்சல்கள் கல்வி அமைச்சுக்கு வருவதாகத் தெரிவித்த அவர், பாடசாலைகளைத் திறப்பு குறித்து, சரியான திகதி அறிவிக்காமையால், மாணவர்கள் அதிக அழுத்தங்களுக்கு உள்ளாகின்றனர் என்றார்.

2021 முதலாம் தவணை கற்றல் நடவடிக்கை, ஜனவரி மாதம் 11 ஆம் திகதி வெற்றிகரமாக ஆரம்பிக்கப்படும். குறுகிய அரசியல் நோக்கங்களைக் கருத்தில் கொண்டு,  மாணவர்களின் கற்றல் நடவடிக்கைகளை மீள ஆரம்பிக்கவில்லை எனத் தெரிவித்த அவர்,  பாடசாலைகளில் சுகாதார பாதுகாப்பு  சிறந்த முறையில் செயற்படுத்தப்படும். ஆகவே, பெற்றோர் அச்சம் கொள்ள  வேண்டாம். சவால்களை வெற்றி கொள்ள, அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமெனக் கேட்டுக்கொண்டார்.