சிறைச்சாலைகளின் பாதுகாப்பிற்காக இலங்கை இராணுவத்தின் முன்னாள் உறுப்பினர்களை நியமிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதற்கான அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனி குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் இராணுவ உறுப்பினர்களை பாதுகாப்பு கடமைக்கு இணைத்துக் கொள்ளும் நடவடிக்கை விரைவில் ஆரம்பிக்கப்படும் எனவும் அவர் கூறினார்.

கைதிகள் மற்றும் சிறைச்சாலைகளின் பாதுகாப்பின் நிமித்தம் விசேட பிரிவொன்றை ஸ்தாபிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டிற்கு அமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் சிறைச்சாலைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

இலங்கை இராணுவத்தில் 12 வருடங்கள் சேவையாற்றிய பின்னர் ஓய்வு பெற்றவர்கள் இதற்காக விண்ணப்பிக்க முடியும் என அவர் கூறியுள்ளார்.

புதிதாக சேவையில் இணைத்துக் கொள்பவர்கள் சிறைச்சாலைகளின் புலனாய்வு பிரிவிற்கான குழுவாக செயற்படவுள்ளதாகவும் ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனிய சுட்டிக்காட்டியுள்ளார்.

பாதாள உலகக் குழுவினர், போதைப்பொருள் கடத்தல்காரர்கள் உள்ளிட்ட பாரிய குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர்களை தடுத்துவைத்துள்ள சிறைச்சாலைகளில் ஆரம்பகட்டமாக விசேட பிரிவு ஸ்தாபிக்கப்படும் என அவர் தெரிவித்தார்.

இதேவேளை, சிறைச்சாலைகள் புலனாய்வு பிரிவை மேலும் வலுப்படுத்துவதற்கு தேவையான மறு சீரமைப்புகளுக்குரிய அமைச்சரவைப் பத்திரமும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த அமைச்சரவைப் பத்திரத்திற்கான அனுமதி கிடைத்ததும் அடுத்தகட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனிய சுட்டிக்காட்டியுள்ளார்.