மட்டக்களப்பு நகரில் இன்று (30) முன்னெடுக்கப்பட்டுவரும் அன்டிஜன் பரிசோதனையில் 26 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், 17 வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாநகர சபை மேயர் தி.சரவணபவன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் அண்மைக் காலமாக அதிகரித்துவரும் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிகையை தொடர்ந்து, மட்டக்களப்பு நகரில் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடுவோர், இன்று காலை முதல் மட்டக்களப்பு, காந்திபூங்காவில்  அன்டிஜன் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டனர்.

மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் கிரிசுதன் தலைமையில் இந்த பரிசோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

இதன்போது 549 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் 26 பேர் தொற்றாளர்களாக தற்போது வரை இனங்காணப்பட்டுள்ளனர்.

நகரின் ஒரு பகுதியிலேயே இந்த அன்டிஜன் பரிசோதனைகள் நடத்தப்பட்ட நிலையில் ஏனைய பகுதிகளில் மேற்கொள்ளப்படும்போது இன்னும் பலர் இனங்காணப்படலாம் எனவும் சுகாதாரப் பிரிவினர் தெரிவித்தனர்.

அத்துடன், குறித்த வர்த்தக நிலையங்களுக்கு சென்றவர்களை தனிமைப்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக மட்டக்களப்பு மாநகர சபை மேயர் தெரிவித்தார்.

மட்டக்களப்பு நகரில் உள்ள வர்த்தக நிலையங்களில் அதிகளவான தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ள நிலையில், மாநகரைத் தனிமைப்படுத்தி பரிசோதனைகளை முன்னெடுப்பதற்கான நடவடிக்கைகள் தொடர்பில் உரிய தரப்புடன் கலந்துரையாடி தீர்மானங்கள் எடுக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.