இரணைமடு குளத்தின் மேலும் இரண்டு வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளன எனத் தெரிவித்த கிளிநொச்சி மாவட்ட நீர்ப்பாசனத் திணைக்களம், ஏற்கெனவே படிப்படியாக கதவுகள் திறக்கப்படும் என அறிவித்திருந்த நிலையில் 6 கதவுகள் திறக்கப்பட்டுள்ளன எனவும் கூறினார்.

நேற்று  (30) இரவு பெய்த அடை மழை காரணமாக, இரணைமடு குளத்தின் நீர் வரத்து அதிகரித்தள்ளது. 36 அடி கொள்ளளவு கொண்ட இரணைமடு குளம், அடைவுமட்டத்தை அடைந்து 2.5 அங்குலம் வான்பாய்ந்து வந்தது.

இந்த நிலையில் மேலும் நீர் வரத்து அதிகரித்தமையால் ஆரம்பத்தில் இரண்டு வான்கதவுகளையும் பின்னர் மேலும் இரண்டு வான் கதவுகளையும், 6 அங்குலங்களுக்கு திறந்து விடப்பட்டுள்ளதாக, திணைக்களம் தெரிவித்துள்ளது.

நீர் வரத்து மேலும் அதிகரிக்கும் சந்தர்ப்பத்தில், அளவுமட்டத்தில் அதிகரிப்பு செய்யவோ அல்லது மேலும் கதவுகளை திறப்பது தொடர்பிலோ தீர்மானிக்கப்படுமெனத் தெரிவித்த திணைக்களம், இவ்விடயம் தொடர்பில் முழுமையான கண்காணிப்பு இடம்பெற்று வருவதாகவும் கூறியுள்ளது.

இதேவேளை, பன்னங்கண்டி, முரசுமோட்டை, பரந்தன், ஊரியான், கண்டாவளை, உமையாள்பரம் உள்ளிட்ட பகுதி மக்களை அவதானமாக செயற்படுமாறு, கிளிநொச்சி மாவட்ட இடர் முகாமைத்துவ நிலையம் அறிவுறுத்தியுள்ளது.

மேலும், கல்மடு குளம், பிரமந்தனாறு குளம், கனகாம்பிகை குளம், அக்கராயன்குளம், கரியாலை நாகபடுவான்குளம், புதுமுறிப்பு குளம்;, குடமுருட்டி குளம், வன்னேரிக்குளம் என்பன வான் பாய்ந்து வருவதால், குறித்த குளங்களை அண்மித்த தாழ்நில பகுதிகளில் உள்ள மக்களை, வெள்ள முன்னெச்சரிக்கையுடன் செயற்படுமாறும், மாவட்ட இடர் முகாமைத்துவ நிலையம் அறிவுறுத்தியுள்ளது.

அத்துடன், குறித்த குளங்களைப் பார்வையிடுதல், நீராடுதல் மற்றும் மீனபிடிப்பதில் ஈடுபடுதல் ஆகியவற்றை தவிர்க்குமாறும், அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, தொடர்ச்சியான மழைவீழ்ச்சி பதிவாகும் நிலையில், உமையாள்புரம் – விளாவோடை செல்லும் வீதியின் குறுக்கான வெள்ள நீர் கடந்து வருகின்றது. எனவே, பாலத்தின் ஊடாக போக்குவரத்து செய்யும் மக்கள் அவதானமாக செயற்படுமாறு, மாவட்ட இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்தள்ளது.