அனைத்து அரசியல் கைதிகளுக்கும் பொதுமன்னிப்பு வழங்கி விடுதலை செய்ய வேண்டுமென வலியுறுத்தி, புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சியினால் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

வவுனியா வைத்தியசாலைக்கு முன்பாக இன்று (02) இந்த ஆர்ப்பாட்டம்  முன்னெடுக்கப்பட்டது.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கருத்து தெரிவித்த போது…

“கடந்த முப்பது வருட கால இனப்பிரச்சினை சம்பந்தமாக நடைபெற்ற போரில் அரசுக்கு எதிராக ஈடுபட்டார்கள் எனும் குற்றச்சாட்டில் நாட்டிலுள்ள சிறைகளில் நூற்றுக்கும் கிட்டியளவில் அரசியல் கைதிகள் அடைக்கப்பட்டு தொடர்ச்சியாக பழிவாங்கப்பட்டு வருகிறார்கள்.

அரசியல் கைதிகள் மீதான வழக்குகள் யுத்தம் முடிவுற்று பதினொரு வருடங்கள் கடந்தும் விசாரணை செய்யப்படாமல் இருந்து வருகிறது. இது அப்பட்டமான நீதிமறுப்புச் செயற்பாடாகும்.

‘காலம்தாழ்த்தி வழங்கப்படும் நீதி – நீதி மறுப்புக்குச் சமனாகும்’ என்பதை அரசு கவனத்தில் கொள்ளல் வேண்டும். எனவே, அனைத்து அரசியல் கைதிகளையும் எதுவித நிபந்தனையும் இன்றி பொது மன்னிப்பளித்து விடுதலை செய்யுமாறும் கோருகின்றோம்.

மக்கள் விடுதலை முண்ணனிக்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.  பத்தாயிரம் வரையிலான முன்னாள் போராளிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.

ஆர்ப்பாட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் வினோநோகராதலிங்கம், புதியஜனநாயக மாக்சிச லெனினிச கட்சியின் முக்கியஸ்தர்களான, நி.பிரதீபன், டொன்பொஸ்கோ, கட்சி உறுப்பினர்கள், ஈ.பிஆர்.எல்.எவ் மத்தியகுழு உறுப்பினர்களான கே.அருந்தவராயா,ரேகன் புதிய அரச பொது ஊழியர்சங்கத்தை சேர்ந்தவர்கள் கலந்துகொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில்  ஈடுபட்டவர்கள் அரசியல் கைதிகளுக்கு மன்னிபே கிடையாதா?, கைதிகளை விடுதலைசெய், முஸ்லிம்களின் ஜனாஸாக்களை எரிக்காதே, காணாமல் ஆக்கப்பட்டோரின் போராட்டங்களுக்கு பதில் என்ன? போன்ற  கோசங்களை  எழுப்பியிருந்ததுடன், பதாதைகளையும் தாங்கியிருந்தனர்.