தபால் ரயில் சேவை போக்குவரத்தில் ஈடுபடாமையாலும் இலங்கை போக்குவரத்து சபைக்குரிய பஸ்களை பயன்படுத்த முடியாமையாலும் கடிதங்களை விநியோகிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

திணைக்களத்தின் வாகனங்களை மாத்திரம் பயன்படுத்தியே தற்போது கடிதங்கள் விநியோகிக்கப்படுவதாக தபால் மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன குறிப்பிட்டார்.

இதனால் கடிதங்களை பகிர்ந்தளிப்பதில் இரண்டு நாட்களுக்கு மேல் தாமதம் ஏற்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

சில ஊழியர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாலும் ஏனைய சிலர் வௌி மாகாணங்களில் இருந்து சேவைக்கு சமூகமளிப்பதாலும் ஊழியர்களை உரிய முறையில் பயன்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தபால் மா அதிபர் தெரிவித்தார்.

நாளாந்தம் தபால் திணைக்களத்திற்கு கிடைக்கும் கடிதங்கள் மற்றும் பொதிகளில் மூன்றில் ஒரு பங்கு ரயில்களூடாக விநியோகிக்கப்படும்.

எனினும், இதற்கான ரயில் சேவை தற்போது போக்குவரத்தில் ஈடுபடுவதில்லை.

கொழும்பு மற்றும் அதிக மக்கள்தொகை உள்ள பகுதிகளிலேயே கடிதங்களை பகிர்ந்தளிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தபால் மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன சுட்டிக்காட்டினார்.