முல்லைத்தீவு மாவட்டத்தில் ஐயப்ப பக்தர்கள் சிலர் கொக்கிளாயில் இருந்து முள்ளியவளை வரையான பாதயாத்திரை ஒன்றை, இன்று ஆரம்பித்துள்ளனர்

வருடம் தோறும் குறித்த காலப்பகுதியில் ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதமிருந்து இந்தியாவிலுள்ள சபரிமலைக்கு சென்று, அங்கு வழிபட்டு வருவது வழமை.

இருப்பினும், கொரோனா வைரஸ் காரணமாக சபரிமலைக்கு செல்ல முடியாத துர்ப்பாக்கிய நிலைக்கு ஐயப்ப பக்தர்கள் தள்ளப்பட்டுள்ள நிலையில், சபரிமலைக்கு சென்று தாங்கள் செல்கின்ற பாதயாத்திரையை நினைவுபடுத்தி, அந்த கடவுளை வழிபடும் முகமாக குறித்த அதே தூரத்தை உள்ளடக்கிய வகையில் கொக்கிளாய் பகுதியில் இருக்கின்ற ஐயப்பன் கோவிலில் இருந்து, இன்று பாதயாத்திரையை  ஆரம்பித்துள்ளனர்

குறித்த பக்தர்கள் கொக்கிளாயில் இருந்து ஊற்றங்கரை பிள்ளையார் கோவிலுக்கு சென்று இன்று இரவு அங்கே தங்கியிருந்து, நாளை முள்ளியவளை – பொன்நகர் பகுதியில் அமைந்திருக்கின்ற ஐயப்பன் கோவிலில் விசேட வழிபாடுகளளோடு, தங்களுடைய விரதத்தை பூர்த்தி செய்ய இருப்பதாக தெரிவிக்கின்றனர்

அந்தவகையில், குறித்த பக்தர்கள் கொக்கிளாயில் இருந்து கொக்கிளாய் – முல்லைத்தீவு பிரதான வீதி வழியாக வந்து முள்ளியவளை பகுதி நோக்கி சென்று வருகின்றனர்.
இவர்கள் நீராவியடி பிள்ளையார் கோவிலிலும் தங்களுடைய வழிபாடுகளை மேற்கொண்டு இடையிடையே கோவிலில் வழிபாடுகளை மேற்கொண்டு, இன்று இரவு ஊற்றங்கரை பிள்ளையார் கோவிலுக்குச் செல்ல உள்ளனர்

இந்நிலையில், வேம்படி சந்திப் பகுதியில் குறித்து ஐயப்ப பக்தர்கள் பாதயாத்திரை வந்ததை ஊடகவியலாளர்கள் செய்தி சேகரித்த போது, குறித்த பகுதியில் நிலைகொண்டிருந்த இராணுவத்தினர் ஊடகவியலாளர்களது செய்தி சேகரிப்பு நடவடிக்கைக்கு இடையூறு விளைவித்து இருந்தனர்.

குறித்த இடத்தில் வீதி தடை ஒன்றினூடாக பக்தர்கள் வருகை தந்த போது குறித்த இடத்தில், ஒளிப்பதிவு செய்து கொண்டிருந்த ஊடகவியலாளர்களை இராணுவத்தினர் வருகை தந்து, குறித்த இடத்தில் ஒளிப்பதிவு செய்ய வேண்டாம் என்று அச்சுறுத்தியிருந்தனர்.
இருப்பினும், வீதியால் வருவதை தாம் ஒளிப்பதிவு செய்வதற்கு தடை விதிக்க முடியாது என, கூறி ஊடகவியலாளர்கள் ஒளிப்பதிவு செய்திருந்தனர்.