இந்திய வெளியுறவு அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர் அவர்களுக்கும்  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்குமிடையிலான சந்திப்பு இன்றுகாலை 9.00 மணியளவில் கொழும்பிலுள்ள இந்திய இல்லத்தில் நடைபெற்றது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன் தலைமையில் தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், ரெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதன், பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன்  ஆகியோர் இதில் பங்கேற்றிருந்தனர் .

இந்திய தரப்பில் வெளியுறவு அமைச்சருடன், இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே உள்ளிட்ட பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

இதன் போது தமிழ் மக்களின் பிரச்சினைக்கு 13ஆவது திருத்தத்தை உள்ளடக்கியதாக ஒரு நிரந்தர அரசியல் தீர்வு வழங்கப்பட வேண்டுமென இந்திய வெளியுறவு அமைச்சர் நேற்றைய ஊடக சந்திப்பில் தெரிவித்தமையை வரவேற்பதுடன், அது தமிழ் மக்களுக்கு ஆதரவாக அமைந்ததாகவும் அதனடிப்படையில் ஒரு நிரந்தர அரசியல் தீர்வை காண்பதற்கு உதவ வேண்டும் என்றும் கூட்டமைப்பினர் கேட்டுக்கொண்டனர்.

இதற்கு கலாநிதி ஜெய்சங்கர் அவர்கள்,

புதிய அரசியலமைப்பு ஒன்று வரும்போது இருப்பதைப் பாதுகாத்துக்கொள்ளப் (13ஆவது திருத்தம்) போகிறீர்களா அல்லது அதற்கு மேலதிகமாக சென்று பின்னடைவைக் காணப் போகிறீர்களா என்று தெரிவித்தார்.

நாம் இருப்பதை பாதுகாத்துக் கொள்வதுடன் அதற்கு மேலதிகமாக செல்வதற்கும் அழுத்தங்களை கொடுப்போமென கூட்டமைப்பினர் தெரிவித்தனர்.

அதற்கு தமிழர்களிடையே ஒற்றுமை மிக அவசியமாகும் என்று தெரிவித்த கலாநிதி ஜெய்சங்கர் அவர்கள்,

தனியே தமிழ் தேசியக் கூட்டமைப்பாக மாத்திரமன்றி இதர தமிழ் பிரதிநிதிகளின் ஒற்றுமையும் முக்கியமானது. அப்போதுதான் இவ்விடயத்தை கையாளுவதற்கும் அழுத்தங்களை கொடுப்பதற்கும் எமக்கு இலகுவாக இருக்கும். இவர்களுக்குள் ஒற்றுமை இல்லை ஒன்றாக கேட்பதில்லை என்று காரணம் கூறி அரசாங்கம் பல விடயங்கள் தட்டிக் கழிக்கும் நிலை வரலாம் என்று தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய தமிழ் தேசியக் கூட்டமைப்பினர்,

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தை (பலாலி) மீண்டும் திறப்பதில் அரசாங்கம் அக்கறை காட்டவில்லை. ஆகவே, அதற்கு நீங்கள் அழுத்தம் கொடுக்க வேண்டும். அதுவே தமிழ் மக்களையும் இந்தியாவையும் பிரத்தியேகமாக தமிழ் நாட்டையும் இணைக்கும் ஒரு புள்ளியாக இருக்க முடியும். காங்கேசன்துறை துறைமுகம், சீமெந்து தொழிற்சாலை என்பவற்றை வேறு தரப்பிற்கு வழங்கும் முயற்சிகள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்று தெரிவித்ததுடன், மேற்கொள்ளப்பட வேண்டிய பல அபிவிருத்தி பணிகள் தொடர்பிலும் எடுத்துக் கூறினார்கள்.