கிழக்கு மாகாணத்திலுள்ள 13 உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்கள் தமக்குரிய அதிகாரங்களை இனிமேல் பயன்படுத்த முடியாது என கிழக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் என்.மணிவண்ணன், நகர சபைக்கும் பிரதேச சபைகளுக்கும் அறிவித்துள்ளார்.

கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத்தின் அறிவுறுத்தலுக்கு அமைவாக, இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, ஏறாவூர், அம்பாறை ஆகிய நகர சபைகளின் தலைவர்களும் பொத்துவில், இறக்காமம், பதியத்தலாவ மண்முனைப்பற்று (ஆரையம்பதி), வாகரை, வாழைச்சேனை, ஏறாவூர்ப்பற்று, சேருவில, தம்பலகாமம், திருகோணமலை பட்டினமும் சூழலும், மொறவெவ ஆகிய பிரதேச சபைகளின் தலைவர்களும் இனிமேல் தமக்குரிய அதிகாரங்களைப் பயன்படுத்த முடியாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வியடம் சம்பந்தமாக சம்பந்தப்பட்ட மாவட்ட உள்ளூராட்சி உதவி ஆணையாளர்களுக்கும் உள்ளூராட்சி மன்றங்களின் செயலாளர்களுக்கும் கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளரால் அனுப்பி வைக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

“மேற்குறிப்பிட்ட சபைகளில் 2021ஆம் நிதியறிக்கையை (பட்ஜெட்) சமர்ப்பித்து, சபையின் அங்கிகாரத்தைப் பெறுவதில் ஏற்பட்ட சிக்கல் நிலமை அத்துடன்,  உரிய சபைகளது தவிசாளர்கள் தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள முறைப்பாடுகள் தொடர்பில் விசாரணை மேற்கொள்வதற்காக ஆளுநரால் விசேட வர்த்தமானி வெளியிடப்படவுள்ளது.

“அதுவரை மேற்குறிப்பிட்ட உள்ளூராட்சி மன்றங்களில் சபை அமர்வுகளை நடத்தாமல் இருப்பதுடன், தவிசாளர் தனது அதிகாரங்களைப் பயன்படுத்துவதில் இருந்து தவிர்த்திருப்பதற்குரிய  நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகின்றீர்கள்.

“குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் எந்தவிதமான மூலதன வேலைத்திட்டங்களையோ இலவச விநியோகங்களையோ மேற்கொள்ளாதிருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுமாறும் கேட்டுக் கொள்கின்றேன்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.