கொரோனா வைரஸால் உயிரிழப்பவர்களைத் தகனம் செய்ய வேண்டுமென்றே, அது தொடர்பான விசேட நிபுணர்கள் குழு பரிந்துரை செய்துள்ளதெனத் தெரிவித்த சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி, எனவே நிபுணர்களின் பரிந்துரைகளின்படியே செயற்படுவோம் என்றார்.

பாராளுமன்றில் சுகாதார அமைச்சின் அறிவிப்பை வெளியிட்டு உரையாற்றும்போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இதன்போது தொடர்ந்து உரையாற்றிய அவர், ”கொரோனா வைரஸால் உயிரிழப்பவர்களை அடக்கம் செய்வதா, தகனம் செய்வதா? என்பதை ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட நிபுணர் குழு, தொற்றுக்குள்ளாகி இறப்பவர்களின் சடலங்களைத் தகனம் செய்ய வேண்டுமென்றே பரிந்துரைத்துள்ளது. இந்தத் தீர்மானம் அரசியல், மத,  தனிப்பட்ட நோக்கங்களுக்காக மாற்றப்படாது” என்றார்.

எனினும், இதன்போது ஒழுங்குப் பிரச்சினை எழுப்பிய பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், ”கடந்த டிசம்பர் 10ஆம் திகதி இது தொடர்பாக நான்  கேள்வி எழுப்பியிருந்தேன்.  டிசம்பர் 24ஆம் திகதி, இது தொடர்பாக நிபுணர்கள் குழுவொன்று அமைக்கப்பட்டது.  நிபுணர்கள் குழுவின் அறிக்கையில், சடலங்களை அடக்கம் செய்ய முடியுமென்று கூறப்பட்டுள்ளது. அதில் எப்படி அடக்கம் செய்வது, இறுதிக் கிரிகையை எப்படிச் செய்வது என்பது தொடர்பான விவரங்கள் உள்ளன. எனவே, உங்களின் பதில்கள் திருப்தியானதாக இல்லை.  அந்த அறிக்கையை வழங்க முடியுமா” என்றார்.

இதற்குப் பதிலளித்த சுகாதார அமைச்சர், ”வைரஸ் தொடர்பான விசேட நிபுணர்கள், இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்ணான்டோ பிள்ளையைச் சந்தித்துள்ளனர். இதன்படி, அந்தக் குழுவின் தீர்மானம், அமைச்சினால் அமைக்கப்பட்டுள்ள பிரதான நிபுணர்கள் குழுவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக, பிரதான குழுவிடம் இருந்து பதில் வரவில்லை. அந்தக் குழுவின் தீர்மானம் வந்த பின்னர், அது தொடர்பாக செயற்படுவோம்” எனப் பதிலளித்தார்.